*புதிதாக 4 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு
கூடலூர் : பெரியாறு புலிகள் சரணாலயத்தில் நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 4 புதிய பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் பத்தினம்திட்டா மாவட்டங்களில், சுமார் 925 கிலோ மீட்டர் பரப்பளவில் பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் வாழும் பல்லுயிர் உயிரினங்கள் பற்றி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 220 அரிய வகை பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு, வனச்சரகத்தில் பறவை இனங்கள் அதிகரித்துள்ளதா என்பது குறித்தும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பறவையினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது இடம்பெயருகிறதா என்பது குறித்தும் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இந்தப் பணியில், பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகம், வனவிலங்கு ஆய்வு மையம், கேரளா கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்கள், பல்லுயிர் சமூக ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள், மற்றும் பறவை நிபுணர்கள் என 54 பேர் பங்கேற்றனர்.
இதில் பறவைகள் அதிகம் வந்து போகும் இடங்கள் மற்றும் பறவைகள் தங்கி ஓய்வெடுக்கும் இடங்களான வண்டிப்பெரியாறு, தேக்கடி, வல்லக்கடவு மற்றும் பம்பை வனச்சரங்களுக்கு உட்பட்ட 28 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 228 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன.
முந்தைய கணக்கெடுப்பின்போது இல்லாத ப்ளூத்ரோட், ட்வேனி பிபிட், அல்ட்ரா மரைன், பிளை கேட்சர் ஆகிய 4 புதிய பறவை இனங்கள் இந்த வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட பறவைகளில் 16 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post பெரியாறு புலிகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு அழியும் அபாயத்தில் 16 பறவை இனங்கள் appeared first on Dinakaran.