நாளை மறுநாள் கூடுகிறது டெல்லி பேரவை கூட்டம்: 5 ஆண்டாக மூடி வைக்கப்பட்ட 14 ‘சிஏஜி’ அறிக்கை விரைவில் ‘ரிலீஸ்’.! சபாநாயகராக விஜேந்திர குப்தா தேர்வு?

6 hours ago 1

புதுடெல்லி: நாளை மறுநாள் டெல்லி பேரவை முதல் கூட்டம் கூடும் நிலையில், அப்போது 14 ‘சிஏஜி’ அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. சபாநாயகராக விஜேந்திர குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில், புதிய முதல்வராக ரேகா குப்தாவும், பாஜக எம்எல்ஏக்கள் பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர், கபில் மிஸ்ரா, பங்கஜ் குமார் சிங் ஆகிய ஆறு பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

டெல்லி சட்டமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்பார்கள்; அதேநேரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 14 ‘சிஏஜி’ தணிக்கை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படும். முந்தைய ஆம்ஆத்மி ஆட்சி காலத்தில் பிரபலமாக பேசப்பட்ட மதுபான கொள்கை முடிவு ஊழல் குறித்த அறிக்கையும், இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் இருந்த காலத்தில், சிஏஜி அறிக்கைகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய பாஜக தொடர்ந்து கோரிக்கை விடுத்தது. ஆனால் கெஜ்ரிவால் நீதிமன்றத்தையும் அணுகினார்.

இதற்கிடையில் தேர்தல்கள் வந்ததால், சிஏஜி அறிக்கையை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே வரும் 24, 25, 27 ஆகிய தேதிகளில் முதல் சட்டமன்ற கூட்டம் கூடும் என்பதால் பெரும் அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே பாஜக எம்எல்ஏ விஜேந்திர குப்தா நேற்று முதல்வர் ரேகா குப்தாவை சந்தித்தார். முன்னதாக விஜேந்திர குப்தா அளித்த பேட்டி ஒன்றில், கட்சி தன்னை சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளதாகவும், சபையில் தனது கடமைகளை முறையாகச் செய்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நாளை மறுநாள் கூடுகிறது டெல்லி பேரவை கூட்டம்: 5 ஆண்டாக மூடி வைக்கப்பட்ட 14 ‘சிஏஜி’ அறிக்கை விரைவில் ‘ரிலீஸ்’.! சபாநாயகராக விஜேந்திர குப்தா தேர்வு? appeared first on Dinakaran.

Read Entire Article