வாஷிங்டன்: போரை முடிவுக்கு கொண்டு வர புடினும், ஜெலென்ஸ்கியும் ஒன்று சேர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‘ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கியும் ஒன்று சேர வேண்டும்.
இரு தரப்பிலும் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற விரும்புகிறேன். இந்த போரானது அமெரிக்காவை நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும், ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் வெகுவாக பாதிக்கிறது. அமெரிக்கா 300 பில்லியன் டாலரும், ஐரோப்பா 100 பில்லியன் டாலர்களும் முதலீடும் செய்துள்ளோம். உக்ரைனுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பணம் கொடுத்தார்.
நமது நாட்டின் பணத்தை வெகு தொலைவில் உள்ள ஒரு நாட்டிற்குச் செலவிடுகிறோம். முந்தைய பைடன் அரசு எங்களது அரசை சிக்கலில் ஆழ்த்தி உள்ளது. மத்திய கிழக்கில் நடக்கும் போரையும் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். இறந்த இஸ்ரேல் குழந்தைகளைப் பார்க்கும் போது மிகவும் வேதனையடைகிறேன். வரிவிதிப்பு முறைகளில் பரஸ்பர வரிவிதிப்பு முறைகளை கையாள விரும்புகிறோம். நியாயமாக நடந்து கொள்ள விரும்புகிறோம்’ என்றார்.
The post போரை முடிவுக்கு கொண்டு வர புடினும், ஜெலென்ஸ்கியும் ஒன்று சேர வேண்டும்: அமெரிக்க அதிபர் விருப்பம் appeared first on Dinakaran.