ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில்வே பாலம் மார்ச் முதல் வாரத்தில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நான்காவது முறையாக பாலத்தில் செங்குத்து பாலம் தூக்கி இறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் முதல் வாரத்தில் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை முன்னிட்டு மேடை அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ள இந்தப் புதிய ரயில் பாலத்தில் பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்று தற்போது ரயில்களை வேகமாக இயக்கியும், நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி, இறக்கியும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேற்று ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் வஸ்தவா முன்னிலையில் 4வது முறையாக சோதனை நடைபெற்றது. அப்போது, புதிய ரயில் பாலத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பாம்பன் நோக்கி ரயில் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செங்குத்து தூக்கு பாலம் திறக்கப்பட்டு கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் கடந்து சென்றன. இதனை சாலை பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி சரத் வஸ்தவா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
The post திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நான்காவது முறையாக ஒத்திகை appeared first on Dinakaran.