திருச்சி: பெரியாரை விமர்சிக்க சீமானை பயன்படுத்திய பாஜ, திருப்பரங்குன்றத்தில் மத ரீதியாக பிரச்னையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டதால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவால் பெரும்பான்மை பெற முடியவில்லை. டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மி , காங்கிரஸ், இடதுசாரிகள் தனித்து போட்டியிட்டனர். ஒன்றிணைந்து போட்டியிட்டு இருந்தால் பாஜவை வீழ்த்தி இருக்கலாம். நோக்கத்தை மறந்து விட்டு தங்களில் யார் பெரியவர் என்கிற சுய கவுரவும் பார்த்ததன் விளைவு தான் டெல்லி தேர்தல் முடிவு. இந்தியா கூட்டணிக்கு டெல்லி தேர்தல் ஒரு படிப்பினை. மக்களின் ஆதரவு பாஜவிற்கு சென்று விட்டது என கூற முடியாது.
அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்று விடலாம் என கருதி பெரியாரை சீமான் தாக்கி பேசினார். ஆனால் அவர் பேசுவது தவறு என அந்த கட்சியினரே கூறி வெளியேறினர். பெரியாரை பாஜவால் நேரடியாக விமர்சனம் செய்ய முடியவில்லை. அதனால் சீமானை பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் சீமானின் கருத்தை ஆதரித்த பாஜ தலைவர் அண்ணாமலை, தேர்தல் முடிவுக்கு பின் அவர் ஓவராக பேசி விட்டார் என கூறுகிறார். சீமானை போலவே அவரும் மாற்றி மாற்றி பேசுகிறார். பாஜ தமிழகத்தில் காலூன்ற திருப்பரங்குன்றத்தில் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி உள்ளார்கள். மத ரீதியாக பிளவுபடுத்தி குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சிகள் தமிழகத்தில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post பெரியாரை விமர்சிக்க சீமானை பயன்படுத்தினர்; திருப்பரங்குன்றத்தில் மத ரீதியாக பிரச்னையை உருவாக்க பாஜ முயற்சி: முத்தரசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.