பெரம்பூர் ரயில் நிலையம் அருகே முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டு

4 months ago 12

பெரம்பூர், ஜன.5: பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. உடனே, அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டும் காசிநாதன், முரளி, ரஜினி ஆகிய 3 பேர், டார்ச் லைட் உதவியுடன் அந்த அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து 3 மாதங்களே ஆன பெண் குழந்தை, துணியால் சுற்றப்பட்ட நிலையில் அங்கு இருப்பது தெரிந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், பெரம்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து, அங்கிருந்த உதவி ஆய்வாளர் ரேணுகா தேவியிடம் ஒப்படைத்தனர். அவர், வில்லிவாக்கம் குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்டு, குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் ஜோஸ்வின் மற்றும் முகேஷ் ஆகியோரை வரைவழைத்து, குழந்தையை ஒப்படைத்தார்.

இதையடுத்து, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்று, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், குழந்தை நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பால மந்திர் குழந்தைகள் காப்பகத்தில் இந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை பத்திரமாக மீட்ட ஆட்டோ டிரைவர்களை, போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

The post பெரம்பூர் ரயில் நிலையம் அருகே முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article