சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னையில் 2வது நாளாக ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தேன். சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த மாதிரியான முடிவெடுக்க வேண்டும் என கருத்துக்களை கேட்டுள்ளோம். கூட்டணி குறித்து எந்த மறைமுக பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடருகிறோம்.
மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். விரைவில் மாவட்டம் வாரியாக ஆய்வு நடத்தி கூட்டணி குறித்து அறிவிப்போம். ஈரோடு கிழக்கில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாகவே தரப்பட்டது. சென்னை வந்த அமித் ஷா எங்களை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது. கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து கவலை இல்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம்.
மக்களவை தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சூழ்ச்சி நடந்தது. பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் எங்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து என்.டி.ஏ.வில் உள்ள அனைவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம்; ஓபிஎஸ் அணியை இணைக்காமல் அதிமுக வெற்றி பெற முடியாது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி தற்போது கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுள்ளார். ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் இணைந்தால்தான் அதிமுக வெற்றி பெறும் என்ற மாற்றுக்கருத்து உருவாகும் என்றும் கூறியுள்ளார்.
The post தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.