பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கொளத்தூரில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன. 350 வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் குப்பன் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று(2ம் தேதி) நடந்தது. இதில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் அழைத்து வரப்பட்டன. 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. போட்டியை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, மெத்தை, சேர், மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
The post பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு 350 வீரர்கள் மல்லுக்கட்டு: தெறிக்க விட்ட காளைகள் appeared first on Dinakaran.