
கொழும்பு,
இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்பில் நேற்று தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை சந்தித்தது. போட்டிக்கு முன்பாக சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால் ஆட்டம் 39 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 38.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 29.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 50 ரன்களுடனும், ஹர்லீன் தியோல் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஸ்மிர்தி மந்தனா 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நாளை நடைபெறும் 2-வது லீக்கில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.