சிவகங்கையில் தி.மு.க. நிர்வாகி வெட்டிக் கொலை: 3 பேர் கைது

15 hours ago 4

சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (27 வயது). இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார். ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல் பிரவீன்குமார், சாமியார்பட்டியில் உள்ள அவரது தோப்பில் இருந்தார். அப்போது டூவீலரில் வந்த ஒரு கும்பல், பிரவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.

பிரவீன்குமாரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை - மானாமதுரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து எஸ்.பி. ஆசிஸ்ராவத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் சாமியார்பட்டியைச் சேர்ந்த விக்கி (எ) கருணாகரன்(20 வயது), சிவகங்கையைச் சேர்ந்த பிரபாகரன்(19 வயது), திருப்பத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த குரு (21 வயது) ஆகிய 3 பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article