
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிக்கெல்டன் 58 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ், ஆவேஷ்கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி களம் புகுந்த லக்னோ அணியால் 20 ஓவர்களில் 161 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 35 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 34 ரன் அடித்தபோது ஐ.பி.எல்.-ல் 4 ஆயிரம் ரன்களை (145 இன்னிங்ஸ்) கடந்தார். இதற்காக 2,714 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் 4 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டிய இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சுரேஷ் ரெய்னா 2,881 பந்துகளில் 4 ஆயிரம் ரன்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார்.