துபாய்,
9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (பி பிரிவு) அணிகள் தங்கள் பிரிவில் முறையே 'டாப்-2' இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
முதலாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இறுதிப்போட்டி துபாயில் இன்று இரவு நடக்கிறது. இதில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில்,இந்த ஆட்டத்திற்கான நடுவர்கள் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
அதன்படி, போட்டி நடுவராக ஜி.எஸ்.லட்சுமியும் (இந்தியா), கள நடுவர்களாக நிமாலி பெரேரா (இலங்கை) மற்றும் கிளாரி பொலோசக் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் செயல்பட உள்ளனர். தொடர்ந்து 3வது நடுவராக (டி.வி.நடுவர்) அன்னா ஹாரிஸ் (இங்கிலாந்து), 4வது நடுவராக ஜாக்குலின் வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரும் செயல்பட உள்ளனர்.