பாக்.மண்ணில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்.. இலங்கையின் சாதனையை சமன் செய்த நியூசிலாந்து

2 hours ago 1

ராவல்பிண்டி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் நேற்று நடைபெற்ற 6-வது லீக்கில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷண்டோ 77 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்துஅணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார். பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனையும் சேர்த்து பாகிஸ்தான் மண்ணில் நியூசிலாந்து தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் பாகிஸ்தானில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த வெளிநாட்டு அணிகளின் சாதனை பட்டியலில் இலங்கையை சமன் செய்துள்ளது. இந்த சாதனையில் 7 வெற்றிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அந்த பட்டியல்:-

1.இந்தியா - 7 வெற்றிகள்

2. இலங்கை/நியூசிலாந்து - 6 வெற்றிகள் 

Read Entire Article