பெண்களுக்கு சுயதொழில் என்பது அடையாளம்: கார்மென்ட் பிசினஸில் அசத்தும் உமா அபிராமி!!

2 weeks ago 2

பெண்கள் தங்கள் தனித் திறமைகளைக் கொண்டு தங்களுக்கான வாழ்வாதாரங்களை சுயமாக நிறைவேற்றிக் கொண்டு சுயதொழிலை திறன்பட செய்து ஒரு தொழில் முனைவோராக தங்களை நிலைநிறுத்திக் கொள்வது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. முதுநிலைப் பட்டதாரியாக இருந்தும் சுயதொழிலில் ஈடுபட்டு நிறைய சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு கார்மென்ட் தொழிலில் இறங்கி சாதித்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த உமா அபிராமி. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக வியாபாரச் சந்தைகள் அமைக்கும் ஸ்டால்கள் மூலமாகவும் தனது விற்பனையை செய்து வரும் உமா அபிராமி கார்மென்ட் பிசினஸ் குறித்தும் அதன் தொழில் நுணுக்கங்கள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.

உங்களைப் பற்றி…

எனது சொந்த ஊர் திருச்சி. அங்கே எனது இளங்கலைப் படிப்பை முடித்து இருந்தேன். அதன் பிறகு சென்னையில் எனது முதுகலைப் படிப்பினை முடித்தேன். திருமணம் மற்றும் குழந்தை என வெளியில் வேலைக்கு செல்வதில் சில தடங்கல்கள் ஏற்பட்டது. கணவர் ஐடிதுறையில் இருக்கிறார். மூன்றரை வயதில் குழந்தை இருக்கிறது. ஏதேனும் தொழில் துவங்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தபோது எனது விருப்ப தேர்வான கார்மென்ட் பிசினஸில் இறங்கினேன். எனது கணவர் மற்றும் மாமியாரின் ஆலோசனையின் பெயரில் தான் தொழில் துவங்கும் எண்ணமே எனக்கு ஏற்பட்டது என்றால் அது சற்றும் மிகையில்லை.

கார்மென்ட் பிசினஸில் ஈடுபடும் எண்ணம் ஏற்பட்டது எப்போது…

சிறு வயதிலிருந்தே எனக்கு பிசினஸில் நிறைய ஈடுபாடு இருந்தது. எனக்கு ஏற்கனவே என்னுடைய தாயாரின் தொழிலை கவனித்த அனுபவங்கள் நிறைய இருந்தது. இவை இரண்டையும் கவனத்தில் கொண்டு துணிந்து கார்மென்ட் பிசினஸில் இறங்கினேன். தற்போது கடந்த சில வருடங்களாக பெண்களுக்கான பிரத்யேகமான டிசைனில் புடவைகளை தேர்வுசெய்து வாங்கி விற்பனை செய்துவருகிறேன். இயல்பாகவே எனக்கு உடை தேர்வுகள் செய்வது ரொம்ப பிடித்தமான ஒன்று. பாந்தமாக உடுத்தினால் பெண்களுக்கு உத்வேகமும் தன்னம்பிக்கையும் அதிகமாக கிடைக்கும் என்பதே உண்மை. எனது சிறப்பான உடை தேர்வினை என் வியாபாரத்திலும் பயன்படுத்தி வருகிறேன். எனது தனித்தன்மை வாய்ந்த சிறந்த ஆடைத் தேர்வு நிறைய வாடிக்கையாளர்களை எனக்கு பெற்று தருவதோடு தொழிலில் அடுத்த கட்டத்தினை நோக்கி நகர உறுதுணையாக இருக்கிறது. முக்கியமாக எனது இந்த தொழில் தேர்விற்கும் காரணம் எனது மாமியார் தான். இன்றுவரை இந்த தொழிலை சிறப்பாக நடத்திவர ஊக்கமும் உற்சாகமும் பல்வேறு உதவிகளும் அதிக அளவில் கொடுத்துவருகிறார்.

உங்கள் விற்பனையின் தனித்தன்மை என்ன?

எங்களிடம் இருக்கும் புடவைகள் தரம்வாய்ந்தாக இருப்பதோடு யூனிக்காக இருக்கும். கடைகளில் ஒரு மாதிரியான டிசைன்களில் பல்வேறு நிறங்களில் நிறைய கிடைக்கும். எங்களுடைய விற்பனை அது மாதிரியானது அல்ல. எல்லா டிசைன்களிலும் ஓரிரு புடவைகள் மட்டுமே இருக்கும். நாங்களே நேரடியாக தொட்டுப் பார்த்து அதன் தரத்தினை மற்றும் நிறங்களை பிரத்யேகமாக டிசைன்களை தேர்வு செய்து விற்பனைக்கு வைக்கிறோம். அதனால் எங்களது வாடிக்கையாளர்களுக்கான ஆடை தேர்வுகள் என்பது எளிதாகிறது. அதனாலேயே அதிக வாடிக்கையாளர்கள் எங்களை தேடித்தேடி வருகிறார்கள். எங்களது ஆடைதேர்வால் கவரப்பட்டவர்கள் அதேபோல் ஒரு முறை வாங்கியவர்கள் தொடர்ந்து எங்களுக்கான ஆதரவுகளை தருகிறார்கள். தனித்துவமாக மிளிரும் ஆடைகளை தேர்வு செய்வது என்பதுதானே இத்தொழிலில் முக்கியமான ஒன்று. அதுவே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அல்லது தக்க வைத்துக்கொள்ளக் கூடிய பெரும் உத்தி எனலாம். இன்றைய நவீனத்துவ உலகில் ஆள் பாதி ஆடை பாதி என்கிற உண்மையை பலரும் உணர்ந்துள்ளதால் ஒவ்வொருவரும் தனித்துவமாக தெரிய பல்வேறு முயற்சிகளை ஆர்வமுடன் எடுத்து வருகிறார்கள். இதுவே எங்களை போன்ற தொழில்முனைவோருக்கு நல்ல தொழில் வாய்ப்புகளை அளிக்கிறது.

இதன் விற்பனை எப்படி இருக்கிறது?

நாங்கள் ஆன்லைன் மூலமாக குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்சாப் குழுக்கள், பேஸ்புக் குழுக்கள் மூலமாக எங்களது புடவைகளை காட்சிப் படுத்துகிறோம். எங்கள் வண்ணமயமான புகைப்படங்களால் ஈர்க்கப்பட்ட பலர் எங்களது வாடிக்கையாளர்கள் ஆகிவிடுகின்றார்கள். ஒருசிலர் உடைகளை தொட்டுப் பார்த்து வாங்கும் அனுபவத்தை விரும்புவார்கள். அவர்களுக்காகவே நாங்கள் இன்றைய டிஜிட்டல் வியாபார சந்தைகளில் போடப்படும் ஸ்டால்களில் புடவைகளை காட்சிப் படுத்தி விற்பனை செய்கிறோம். அங்கும் சிறப்பான முறையில் எங்கள் ஆடைகளுக்கான விற்பனை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தொடர்ந்து வாங்கும் பல வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பொட்டிக் போன்ற தனி ஷோரூம் வைத்து நடத்த வேண்டும் என்கிற ஆசைகளும் இருக்கிறது. தற்போது அதற்கான வேலைகளில் ஆர்வமுடனும் துணிச்சலுடனும் இறங்கி மேற்கொண்டுவருகிறேன். இதற்காக எனது கணவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சப்போர்ட்டாக இருந்து வருகின்றனர். அவர்களின் ஊக்கத்தால் தான் நான் தொடர்ந்து பல வெற்றிகளை பெற முடிகிறது. இதுவே எனது தொழில் அடுத்த கட்டத்தை அடையவும் மென்மேலும் சிறப்பாக செயல்படவும் காரணமாக இருந்து வருகிறது.

புடவைகளை தேர்ந்தெடுப்பதற்கான டிப்ஸ் ஏதாவது சொல்லுங்களேன்?

பொதுவாக பெண்கள் புடவை கட்டுவதே பேரழகு தான் என்றாலும், புடவை கட்டியவுடன் இன்னமும் கூடுதல் அழகுடன் தெரிவதற்கு சில விஷயங்களை நாம் பின்பற்றினாலே போதும். முதலில் நமது புடவையின் அழகை நேர்த்தியாக எடுத்துக்காட்டுவது பிளவுஸ்தான். அதனை அழகாக தைத்து உடுத்தினாலே போதும். ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஒல்லியாக தெரிவதற்கும் உதவும். அதே போல் சரியான துணியை தேர்ந்தெடுக்கவும். அதிக எடையில் இல்லாமல் மெலிதாக இலகு ரக புடவைகளைத் தேர்வு செய்யலாம் . அது எளிதாக உடலோடு ஒட்டிக் கொள்ளும். அதேபோன்று புடவை அடர் நிறத்தில் இருக்கும்படி தேர்ந்தெடுங்கள். எனில் அடர்நிறங்கள் மெலிதாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதால், புடவை கட்டினாலும் மெலிதாக இருப்பது போலத் தோன்றுவீர்கள். கீழாக பிரின்ட் செய்யப்பட்ட வடிவங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களை உயரமாகவும் மெலிதாகவும் காட்ட உதவும். ஹரிசாண்டல் கோடுகள் அல்லது பிரின்டிங் செய்யப்பட்ட புடவைகள் உங்களை குண்டாக தெரியவைக்கலாம்.

பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் கார்மென்ட் பிசினஸில் எப்படி இருக்கிறது?

ஆடைகள் தேர்வில் நமக்கு ஒரு தனித்துவமும் ரசனையும் கலைநயப்பார்வையும் இருந்தால் மிகச்சிறப்பாக இத்தொழிலை துவங்கி நடத்தலாம். இதற்கான முதலீட்டுத் தொகை அளவும் நமது விருப்பம் தான். சிறிய முதலீட்டில் நல்ல வருமானத்தை பெறலாம். நமக்கு விருப்பமான நேரத்தில் இந்த தொழிலை நடத்தலாம். மொத்த கொள்முதல் விலையில் புடவைகளை வாங்கி வீட்டிலேயே ஸ்டாக் வைத்துக்கொண்டு ஆன்லைன் மூலமாகவோ, சிறு ஸ்டால்கள் மூலமாகவோ விற்பனை செய்யலாம். இல்லத்தரசிகள், சிறு குழந்தைகள் வைத்திருப்போர் மற்றும் வெளியில் வேலைக்கு செல்ல விரும்பாதவர் என பலரும் இத்தொழிலை தாராளமாக செய்யலாம். பெண்களுக்கேற்ற பாதுகாப்பான தொழில் முயற்சி இது.. கணிசமான வருமானத்தை பெற்றுத் தரக்கூடியதும் கூட. பெண்கள் தங்களுக்கான சுய வருமானத்தினை பெற்று வாழ்வில் தங்கள் சொந்த வருமானத்தில் பயணிப்பது அவர்களுக்கு பல நன்மைகளை பெற்றுத் தருமே என நம்பிக்கை மிளிர பேசுகிறார் உமா அபிராமி.
– தனுஜா ஜெயராமன்

The post பெண்களுக்கு சுயதொழில் என்பது அடையாளம்: கார்மென்ட் பிசினஸில் அசத்தும் உமா அபிராமி!! appeared first on Dinakaran.

Read Entire Article