ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது கடந்த 2023ம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்குகளை விட 6.82 சதவீதம் குறைவானது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14ல் மரணமடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்களிக்க 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து இந்த தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக நள்ளிரவு 11 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதே தொகுதிக்கு கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனால், கடந்த இடைத்தேர்தலை விட தற்போது 6.82 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதிமுக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலை புறக்கணித்தால் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. இதனால் இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகளும் அரசியல் கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
இந்தநிலையில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமான சித்தோடு ஐஆர்டிடி கல்லூரிக்கு இரவில் அனுப்பி வைக்கப்பட்டு ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவரும் கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். ஸ்டிராங் ரூம் மற்றும் சுற்று வட்டாரத்தில் துணை ராணுவ வீரர்கள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; 6.82 சதவீதம் வாக்குகள் குறைந்தது appeared first on Dinakaran.