பெண்களுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை - பிரதமர் மோடி

2 hours ago 1

புதுடெல்லி,

டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 8 ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம்ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளதாக டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு குறித்து பிரதமர் மோடி ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில், அவர் கூறியதாவது:

டெல்லியில் இலவச சுகாதார சேவைக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் அதை செயல்படுத்த விரும்பவில்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் பல நன்மைகள் உள்ளன என்று டெல்லி மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ஆனால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு தடைகளை உருவாக்கினர்.

டெல்லியில் குடிநீர் இல்லை. ஆனால் டாஸ்மாக் கிடைக்கிறது. ஆம் ஆத்மி அரசு மீது, மக்கள் வெளிப்படையாக கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள், அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என மக்கள் கேட்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி தினமும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.

டெல்லியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெறுவதை, பாஜக நிர்வாகிகள் இலக்காகக் கொள்ள வேண்டும். டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு மகத்தான வெற்றியை தொண்டர்கள் உறுதி செய்வார்கள். பெண்களுக்கு ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. பஞ்சாபில் பெண்களுக்கு மாதம் தோறும் பணம் தருவோம் என ஆம் ஆத்மி அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் பாஜக அரசு மத்திய பிரதேசம், மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

இவ்வாறு அதில் பேசி உள்ளார்.

Read Entire Article