தர்மபுரி: பெண்ணை கொலை செய்த மதபோதகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி கண்ணகி (45). முதல் கணவரை பிரிந்து, 2வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள். கண்ணகி அதே பகுதியில் சலவை கடை வைத்து தொழில் செய்து வந்தார். இந்த கடைக்கு அரூர் வர்ணம்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் (பாஸ்டர்) அற்புதராஜ் (53), துணி சலவை செய்ய வருவது உண்டு. இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. ஒருகட்டத்தில் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
அப்போது, கண்ணகி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு இருவருக்கும் சண்டை ஏற்பட்டதில் கண்ணகியை அற்புதராஜ் தாக்கினார். இதில் மயங்கி கீழே விழுந்த கண்ணகியை, தலையணை வைத்து முகத்தில் அழுத்தி கொலை செய்தார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்கு செய்து அற்புதராஜை கைது செய்தனர். இந்த வழக்கை தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சிவஞானம் விசாரித்து மதபோதகர் அற்புதராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
The post பெண் கொலை வழக்கில் மதபோதகருக்கு ஆயுள்: தர்மபுரி மகளிர் விரைவு கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.