கடற்கரை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது: ரயில்வே அதிகாரிகள், போலீசார் விசாரணை

3 hours ago 2

தண்டையார்பேட்டை, ஏப்.23: கடற்கரை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ஆவடிக்கு நேற்று மதியம் மின்சார ரயில் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து 500மீட்டர் தொலைவில் சென்றபோது மின்சார ரயிலின் பின்பக்கத்தில் இருந்து 3வது பெட்டி தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் கீழே இறங்கி தடம் புரண்டது. அப்போது, ரயில் பெட்டியில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக பயணிகள் பீதியடைந்து அலறிக் கூச்சலிட்டனர். இதனை அறிந்த லோகோ பைலட் உடனடியாக மின்சார ரயிலை நிறுத்தினார். மேலும், கடற்கரை ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு ரயில் தடம் புரண்டது குறித்து தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் ரயில் தடம் புரண்ட இடத்தை ஆய்வு செய்தனர். அவ்வழியே செல்ல வேண்டிய ரயில்களை மாற்றுப்பாதையில் இயக்கினர். மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து வந்து ரயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டு அருகே உள்ள கடற்கரை மற்றும் ராயபுரம் ரயில் நிலையங்களுக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ரயில்வே மீட்புக் குழு ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தடம் புரண்ட ரயில் பெட்டியை தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். பின்னர், அந்த மின்சார ரயில் ஆவடி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. மின்சார ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கடற்கரை ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது: ரயில்வே அதிகாரிகள், போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article