மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு திராட்சை பழங்களுக்கிடையே கடத்திய 300 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல்

3 hours ago 2

பல்லாவரம், ஏப்.23: பம்மல், சங்கர் நகர் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் ஒன்று வந்தது. அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கனரக லாரி ஒன்றில், ஆந்திரா வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் உஷாரான சங்கர் நகர் போலீசார், நேற்று அதிகாலை ஆந்திராவில் இருந்து சென்னை வரும் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மகராஷ்டிரா பதிவெண் கொண்ட கனரக சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. அதனை, மடக்கிப் பிடித்த போலீசார், அந்த கனரக வாகனத்தில் ஏறி சோதனை செய்து பார்த்தபோது, லாரியின் சரக்கு வைக்கும் அறையில் திராட்சை பழங்கள் மற்றும் அன்னாசி பழங்கள் அடங்கிய பெட்டிகள் மட்டுமே இருந்தது.

இதனால் லாரி மாறி மறித்து விட்டோமோ என்ற சந்தேகத்தில் போலீசார் இருந்தபோது, எதற்கும் லாரியின் கேபின் மேல் பகுதியில் சென்று பார்க்கலாம் என்று போலீசார் ஏறிப்பார்த்த போது, அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா தார்ப்பாய்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவற்றை வெளியே எடுத்து பார்த்தபோது, சுமார் 300 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 300 கிலோ கஞ்சாவுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டம் கெய்கவான் பகுதியை சேர்ந்த தேஜஸ்பாபு வாஹ்மாரே (28), பீட் பகுதியை சேர்ந்த சாகர் சகாதேவ் எரான்டே(31) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு திராட்சை பழங்களுக்கிடையே கடத்திய 300 கிலோ கஞ்சா லாரியுடன் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article