
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமராஜர் நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே அந்த தம்பதியினர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பச்சிளம் குழந்தையை வீட்டில் வளர்த்து வந்ததை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அதிகாரிகள், அந்த தம்பதியிடம் விசாரணை நடத்தியதில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தையை வடலூரை சேர்ந்த சித்தா டாக்டரான சத்யபிரியா (வயது 67) என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் கொடுத்து வாங்கி வந்து வளர்ப்பதும், சத்யபிரியா சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்ததும், தவறான முறையில் மற்றும் திருமணம் ஆகாமல் கருவுற்ற பெண்களுக்கு பிரசவம் பார்த்து குழந்தை இல்லாத நபர்களுக்கு குழந்தையை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யபிரியாவை கைது செய்தனர். இந்த நிலையில் சத்யபிரியாவின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யபிரியாவிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.