புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் மோதல் நீடிக்கும் நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி காஸ் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில்,நேற்று முன்தினம் இரவு ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பின் பல நகரங்களில் இரவு நேரத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக இது மேற்கொள்ளப்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் நிரப்புவதற்கு பலர் வாகனங்களில் வரிசையாக நிற்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, இந்தியன் ஆயில் நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் போதுமான எண்ணெய் இருப்பு உள்ளது.
யாரும் தேவைக்கு அதிகமாக பெட்ரோலிய பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெட்ரோலிய பொருட்கள் கிடைக்கிறது என குறிப்பிட்டுள்ளது. பாரத் பெட்ரோலிய கழகம் வெளியிட்டுள்ள செய்தியில்,பெட்ரோல்,டீசல், எல்பிஜி காஸ் ஆகியவை போதுமான இருப்பு உள்ளது. கவலைப்படுவதற்கோ அல்லது பீதி அடைவதற்கோ எந்த காரணமும் இல்லை. எங்கள் விநியோகச் சங்கிலி செயல்பாடுகள் வலுவாகவும் திறமையாகவும் உள்ளன. தடையற்ற விநியோகங்களை உறுதி செய்கின்றன. அனைத்து வாடிக்கையாளர்களும் அமைதியாக இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.
The post பெட்ரோல்,டீசல்,எல்பிஜி காஸ் பற்றாக்குறை இல்லை; போதுமான இருப்பு உள்ளது: எண்ணெய் நிறுவனங்கள் தகவல் appeared first on Dinakaran.