ஓமலூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலுக்கு ரகசிய தகவல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் ஓமலூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் போலீசார் ஓமலூரை அடுத்த காமலாபுரம் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக 357 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தேஜாராம் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும், குட்காவை பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து தேஜாராமை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கார் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 357 கிலோ குட்கா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.