எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க பரிதவிக்கும் பயணிகள்

2 hours ago 1

சென்னை,

சென்னையில் மிகவும் முக்கியமான ரெயில் நிலையமான எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறுசீரமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இங்கு ரெயில் நிலைய கட்டிடங்கள், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ரெயில் நிலையத்தில் 10, 11- வது நடைமேடையை ஒட்டி, மின்சார ரெயில் டிக்கெட் மையம், முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் பதிவு மையம் செயல்பட்டு வந்தது.

ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக, இந்த டிக்கெட் மையங்கள் பூந்தமல்லி சாலை அருகே உள்ள எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலக (ஆர்.பி.எப்.) வளாகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. மின்சார ரெயிலில் செல்லக்கூடிய பயணிகள் இங்கு வந்துதான் டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் வழியாக கடற்கரை - செங்கல்பட்டு இடையே இருமாா்க்கமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து அதிக அளவு பயணிகள் மின்சார ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் மின்சார ரெயில்கள் செல்லும் 10, 11-வது நடைமேடை பகுதியில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். 

முன்னதாக இதன் அருகிலேயே டிக்கெட் கவுண்ட்டர் செயல்பட்டதால் மின்சார ரெயிலுக்கான டிக்கெட் எடுப்பதற்கு மிகவும் எளிதாக இருந்தது. தற்போது உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் எடுத்து வருவதற்குள் தலை சுற்றுவதாகவும் பயணிகள் கூறுகின்றனர். சில பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர் இருக்கும் இடம் தெரியாமல் சுற்றித்திரிவதையும், வயதானோர் சிலர் நடக்க முடியாமல் நடந்து சென்று டிக்கெட் எடுக்க பரிதவிப்பதையும் பார்க்க முடிகிறது.

இதுகுறித்து, ரெயில் பயணிகள் சிலர் கூறும்போது, "எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில்களில் எழும்பூர் வருபவர்கள், அங்கிருந்து மின்சார ரெயிலில் செல்ல வேண்டும் என்றால், டிக்கெட் எடுக்க ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மின்சார ரெயிலில் செல்வதை விட பஸ்சில் பயணம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. பயணிகளின் வசதிக்காக மின்சார ரெயில் நடைமேடை அருகில் உள்ள 'லிப்ட்' அல்லது நடைமேம்பாலத்தில் தானியங்கி டிக்கெட் எந்திரம் வைத்து, பயணிகளுக்கு டிக்கெட் எடுத்து கொடுப்பதற்கு ஊழியர் ஒருவரை பணியமர்த்தவும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Read Entire Article