
பெங்களூரு,
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று மீண்டும் தொடங்குகிறது. அதன்படி 8 நாள் இடைவெளிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.
அதேவேளை கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். எனவே இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டி திட்டமிட்ட படி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில் பெங்களூருவில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. தற்போது மழை பெய்யாவிட்டாலும், போட்டி நடைபெறும் சமயத்தில் 71 சதவீதம் அங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை மழையால் இந்த ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அது பெங்களூரு அணிக்கு சாதகமாகவும், கொல்கத்தாவுக்கு பாதகமாகவும் அமையும். ஏனெனில் பெங்களூரு அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தால் 17 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் ஏற்க்குறைய உறுதி செய்து விடும்.
மறுபுறம் கொல்கத்தா அணி ஒரு புள்ளி பெற்றால் 12 புள்ளிகள் பெறும். மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் மழையால் இந்த ஆட்டம் கைவிடப்பட்டால் கொல்கத்தா அணி வெளியேற வேண்டியதுதான். இதனால் இந்த போட்டி நடைபெற வேண்டும் என்பதுதான் கொல்கத்தா ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.