
மும்பை,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த தொடர் தற்போது மீண்டும் இன்று தொடங்குகிறது.
இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதனால் 18-வது ஆண்டாக இந்த போட்டி வீறுநடை போடுகிறது.
இந்நிலையில் ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு மகேந்திரசிங் தோனியை கேப்டனாக நியமித்துள்ளார்.
இருப்பினும் அவரது அணியில் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரராக வலம் வரும் விராட் கோலி, அதிரடிக்கு பெயர் போன கிறிஸ் கெயில், ஏபி டி வில்லியர்ஸ், சிறந்த ஆல் ரவுண்டரான பிராவோ போன்ற முன்னணி வீரர்களுக்கு இடமளிக்காமல் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஆடல் கில்கிறிஸ்ட் தேர்வு செய்த ஆல் டைம் சிறந்த ஐ.பி.எல். அணி:-
மகேந்திரசிங் தோனி (கேப்டன்), ரோகித் சர்மா, டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்டு, சுனில் நரைன், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா. மலிங்கா மற்றும் புவனேஸ்வர் குமார்.