பெங்களூரு: ஆன்லைன் மோசடியில் ரூ.84.5 லட்சத்தை இழந்த இளம்பெண்

4 weeks ago 6

பெங்களூரு,

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இளம்பெண்ணின் வாட்ஸ்-அப்புக்கு ரிசர்வ் வங்கி அதிகாரி எனக்கூறி கொண்டு ஒரு நபர் பேசினார்.

அப்போது உங்களது வங்கி கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது, அதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று அந்த நபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்படி, மும்பை போலீசார் எனக்கூறி மற்றொரு நபர், இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது நீங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உங்களை கைது செய்வோம் என்று அவர் மிரட்டியுள்ளார். இந்த வழக்கில் உங்களை கைது செய்யாமல் இருக்க தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும்படி மர்மநபர் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதனால் மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.84.5 லட்சத்தை இளம்பெண் அனுப்பி வைத்தார். மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மர்மநபர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரி, மும்பை போலீசார் பெயரில் மிரட்டி பணம் பறித்ததையும் இளம்பெண் உணர்ந்தார். இதுபற்றி ஒயிட்பீல்டு மண்டல சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.

Read Entire Article