
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு நடுவூர்மாதாகுப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு ஏரியில் மின்பிடித்து கொண்டிருந்தபோது நடுவூர்மாதாகுப்பத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 24 மணி நேரமும் போலீசார் நடுவூர்மாதகுப்பத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வஞ்சியூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 24) என்ற போலீஸ்காரர் இரவு பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் வீட்டில் புழுக்கமாக இருந்ததால் மீனவர் ஒருவர் குடும்பத்துடன் வெளியே படுத்து தூங்கிகொண்டு இருந்தார். வெளியே தூங்கிகொண்டு இருந்த 20 வயது இளம்பெண் நள்ளிரவில் தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் சென்றார். இதை நோட்டமிட்ட போலீஸ்காரர் சுதாகர் பின்னால் சென்று கதவை பூட்டிக்கொண்டு அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டார் ஓடி சென்றனர். உடனே போலீஸ்காரர் பக்கத்து அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் சக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று சுதாகரிடம் கேட்டபோது தண்ணீர் கேட்டு வந்ததாக கூறினார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் பொன்னேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் சுதாகரை கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்தது என்ற பழமொழிக்கு ஏற்ப இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் இளம்பெண்ணிம் தவறாக நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.