
தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 350-க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு கல்லூரிகளில் 18 ஆயிரம் டிப்ளமோ படிப்பு இடங்கள் உள்பட மொத்தம் 1½ லட்சம் இடங்கள் உள்ளன. டிப்ளமோ படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து வருவதால், கடந்த சில ஆண்டுகளாகவே, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை சரிவை சந்தித்து வருகிறது.
2024-25-ம் கல்வியாண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரையில், 1½ லட்சம் இடங்களில், அரசு கல்லூரிகளில் 12 ஆயிரம் இடங்கள் உள்பட மொத்தம் 58 ஆயிரத்து 426 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதம் 91 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாகின. டிப்ளமோ படிப்புகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு பெரிய சவால்களை ஏற்படுத்தி உள்ளது.
பாலிடெக்னிக் படிப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. புதிய வகையான படிப்புகள் அறிமுகம், தொழில்நுட்ப பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், டிப்ளமோ படிப்பில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதன் எதிரொலியாக தமிழகத்தில் இயங்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில், 15 கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டு முதல் மூடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அனுமதி கோரி, சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகள் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதில் சில கல்லூரிகள், 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் மட்டும் பங்கேற்காமல், பிற ஆண்டுகள் படிக்கும் மாணவர்களின் படிப்பு நிறைவடையும் வரை கல்லூரிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளன. இன்னும் சில கல்லூரிகளோ, மாணவர்களை, அருகாமையில் உள்ள வேறு கல்லூரிகளுக்கு மாற்றி, கல்லூரிகளை மூடவும் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவர் சேர்க்கை சரிவு காரணமாக கடந்த 2024-25-ம் கல்வியாண்டில் 17 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.