காதல் விவகாரத்தில் பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை: விசாரணையில் பரபரப்பு தகவல்

3 hours ago 3

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா அருகே போலியார் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரா, சிந்துதேவி தம்பதியின் மகள் அகன்ஷா (வயது 22). இவர் பஞ்சாப் மாநில பக்வாராவில் உள்ள எல்.பி.யூ. பல்கலைக்கழகத்தில் ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தார். கடந்த 6 மாதங்களாக டெல்லியில் விண்வெளி என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். ஜெர்மனியில் மேற்படிப்புக்கு செல்ல இருந்தார். அதற்கு சில ஆவணங்கள் தேவைப்பட்டது.

அந்த ஆவணங்களை வாங்குவதற்காக பஞ்சாப்பில் உள்ள கல்லூரிக்கு சென்றிருந்தார். இதற்காக 16-ந் தேதி பஞ்சாப்புக்கு சென்ற அகன்ஷா, அமிர்தசரசில் உள்ள நண்பரின் அறையில் தங்கினார். பின்னர் மறுநாள் 17-ந் தேதி அங்கிருந்து கேரளாவை சேர்ந்த நண்பருடன் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் திடீரென்று கல்லூரியில் 4-வது மாடியில் இருந்து குதித்து அகன்ஷா தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற ஜலந்தர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் இதுகுறித்து அகன்ஷாவின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அகன்ஷாவின் தந்தை ஜலந்தர் போலீசாரிடம் வலியுறுத்தினார். அதை ஏற்ற ஜலந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது அகன்ஷா கொலை செய்யப்படவில்லை. தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது உறுதியானது.காதல் விவகாரத்தில் அகன்ஷா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதாவது கல்லூரியில் படிக்கும் போது பிஜில் மேத்யூ என்ற பேராசிரியருடன் அகன்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பிஜில் மேத்யூவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் அகன்ஷா அவரை காதலித்துள்ளார்.

கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்ற அகன்ஷா மீண்டும் பிஜில் மேத்யூவை சந்தித்துள்ளார். மேலும் பிஜில் மேத்யூவின் வீட்டில் தங்கிய அகன்ஷா, அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அதற்கு பிஜில் மேத்யூ மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்து 2 பேரும் கல்லூரிக்கு சென்றனர். அங்கு வைத்து மீண்டும் 2 பேருக்கும் இடையே திருமண விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

அப்போது கோபம் அடைந்த அகன்ஷா கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலை தொடர்பாக பிஜில் மேத்யூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article