பெங்களூரு அணியில் அடுத்த 3 வருடங்களில் என்னுடைய இலக்கு இதுதான் - விராட் கோலி

2 months ago 13

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்து விட்டன.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) 3 வீரர்களை தக்க வைத்துள்ளது. அதன்படி விராட் கோலி ( ரூ. 21 கோடி), ரஜத் படிதார் ( ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். தொடர் ஆரம்பம் ஆன முதல் தற்போது வரை 18 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவை தவிர்த்து மற்ற அணிக்காக விளையாடுவதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று விராட் கோலி கூறியுள்ளார். மேலும் அடுத்த 3 வருடங்களில் பெங்களூரு அணிக்காக ஒரு ஐ.பி.எல். கோப்பையாவது வென்று கொடுப்பதே இலக்கு என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த ஏலத்தில் ஒரு அணியை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. அடுத்த 3 வருடங்களில் ஒரு முறையாவது ஐ.பி.எல். பட்டத்தை வெல்வதே இலக்கு. அதற்காக எப்போதும் போல எங்களின் சிறந்த செயல்பாடுகளை கொடுக்கப் போகிறோம். கிரிக்கெட்டை விளையாடும் விதத்தில் எங்களுடைய ரசிகர்களை பெருமைப்படுத்த முயற்சிப்பேன். எனக்கு ஆர்சிபி என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த பல வருடங்களில் அது ஸ்பெஷல் தொடர்பை கொண்டுள்ளது. அது இன்னும் வலுவாக வளரும். ஆர்சிபி அணிக்காக விளையாடும் அனுபவம் இன்னும் சிறப்பானது.

ரசிகர்களும் அனைவரும் இந்த அணியில் ஒரே வழியில் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த 3 வருடம் முடியும்போது நான் ஆர்சிபி அணிக்காக 20 வருடங்கள் விளையாடி முடித்திருப்பேன். அதுவே எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயம். இப்படி ஒரே அணிக்காக இவ்வளவு வருடங்கள் விளையாடுவேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. இந்த அணியை விட்டு வேறு அணியில் விளையாடுவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" என்று கூறினார்.

Read Entire Article