சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பேருந்தில் ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஆம்னி பேருந்து டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த 51 வயது மதிக்கதக்க பெண் நேற்று அதிகாலையில் கோயம்பேடு காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: பெங்களூரில் ஐடி கம்பனியில் வேலை செய்து வரும் நான், மாதத்தில் ஒரு நாள் மட்டும் சென்னைக்கு வந்து எனது மகளை பார்த்து விட்டு மீண்டும் பெங்களூருக்கு செல்வது வழக்கம். அதன்படி வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது வாணியம்பாடி அருகே பேருந்து நின்றபோது நான் பயணித்த பேருந்தில் ஏறியவர் நான் அமர்ந்து இருந்த சீட்டுக்கு பின்னால் அமர்ந்து வந்தார்.
திடீரென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரைப் பெற்று கொண்ட போலீசார் விரைந்து வந்து ஆம்னி பேருந்து நிலையத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்து டிரைவர் சேகர் (38) என தெரியவந்தது. அவர் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் அம்பலமானது. பின்னர், கைது செய்யப்பட்ட சேகர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
The post பெங்களூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பேருந்தில் ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: டிரைவர் கைது appeared first on Dinakaran.