ஏகாதசியை அனுசரித்து உற்சவங்கள்
ஸ்ரீமகாவிஷ்ணு ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி முதல் ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி வரை உள்ள நான்கு மாதங்களில் யோகநித்திரை செய்கிறார். இதன் காரணமாக ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயன ஏகாதசி என்று பெயர். ஆவணி வளர்பிறை ஏகாதசியில் அவர் வலது பக்கம் திரும்பிப் படுப்பதால் பரிவர்த்தன ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியில் அவர் யோக நித்திரையில் இருந்து எழுவதால் உத்தான ஏகாதசி என்று பெயர். இதை அனுசரித்துத்தான் பெருமாள் ஆலயங்களில் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஆடி மாத வளர்பிறை ஏகாதசியில் ஜேஷ்டாபிஷேகமும், ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியில் பவித்திர உற்சவமும், கார்த்திகை வளர்பிறை ஏகாதசியில் கைசிக புராணம் படித்தலும் நடைபெற்று வருகிறது.
மார்கழி மாதத்தின் ஏற்றம்
மார்கழி மாதம் பரம பவித்ரமான மாதம். மார்கழி மாதத்தை மார்க்க சீர்ஷ மாதம் என்று சொல்வார்கள். சீர்ஷம் என்றால் தலை. மார்க்கம் என்றால் வழி. இறைவனை அடையக்கூடிய வழிகளில் தலையாய வழியைக் காட்டும் மாதம் மார்கழி மாதம். தேவர்களுக்கு விடிகாலை நேரம் அதாவது காலை 4 முதல் 6 மணி வரை உள்ள நேரம். இந்த நேரத்தில் இறைவனை வழிபடுவது சாலச் சிறந்தது. மார்கழி மாதம் முழுவதும் வழிபாட்டுக்கு உரிய மாதமாக அமைந்திருக்கிறது. இந்த மார்கழி மாதத்தில் தனிப்பட்ட குடும்ப சுபகாரியங்களான திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துவதில்லை. மார்கழியில் செய்த பூஜையின் பலன் தை மாதத்தில் கிடைக்கும் என்பதால் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அத்யயன உற்சவம்
திருவரங்கத்தில் மட்டுமல்லாது எல்லாப் பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, முன் பத்து நாட்களும், ஏகாதசிக்கு பின் பத்து நாட்களும் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்திற்கு “திரு அத்யயன உற்சவம்” என்று பெயர். இந்த உற்சவத்தின் சிறப்பைத் தெரிந்து கொண்டால்தான் வைகுண்ட ஏகாதசியின் பின்னணியை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். மார்கழி மாதத்தில் வளர்பிறை பிரதமை தொடங்கி 20 நாட்கள் பகவானுக்கு உற்சவம் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் விதித்திருக்கின்றன. அத்யயனம் என்றால் வேத இதிகாச புராண சுலோகங்களையும் ஸ்தோத்திரங்களையும் பெருமாள் முன் ஓத வேண்டும் என்று பொருள். போக மண்டபம் தனுர் மாதமான மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி உற்சவங்கள், எல்லாப் பெருமாள் கோயில்களிலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக நடைபெற்றாலும், பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில் நடைபெறுவதுதான் மிகவும் கோலாகலமாக இருக்கும். அதற்குக் காரணம் இருக்கிறது.
“காவேரி விரஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்
ஸ வாசுதேவோ ரங்கேஸ: பிரத்தியட்சம் பரமம் பதம்’’
என்று ஒரு சுலோகம் உண்டு. வைகுண்டம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் வைகுந்தத்தின் தத்துவத்தை பூலோகத்தில் உள்ளவர்கள் கண்டு கொள்ளவேண்டும் என்ற அமைப்பில் ஸ்ரீரங்கம் கோயில் அமைந்துள்ள படியால் “பூலோக வைகுந்தம்” என்று வழங்கப்படுகிறது. எம்பெருமான் ஆனந்தமாக பாம்பணையில் சயனித்துக் கொண்டிருப்பதால் திருவரங்கத்தை “போக மண்டபம்” என்றும் அழைக்கிறார்கள்.
தலைமைத்தலம் ஸ்ரீரங்கம்
ஆழ்வார்கள் மங்களாசாசனம் அருளிய வைணவத் திருத்தலங்கள் 108. அந்த 108 திவ்ய தேசங்களையும் ஒரு மரமாக உருவகித்தால், அதன் அடிமரமாக இருப்பது ஸ்ரீரங்கம். மற்றத் தலங்கள் அந்த மரத்தினுடைய கிளைகளாக இருக்கின்றன. வேரில் சேர்க்கும் நீர் அடிமரத்தின் வழியாய் அதனுடைய கிளைகளுக்குச் சென்று, அந்த மரத்தை செழிக்கச் செய்கிறதல்லவா. அதுபோல் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாக்களும் மற்ற திவ்ய தேசத்தின் ஏற்றத்திற்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. அதனால்தான் வைணவத்தின் தலைமை நிலையமாக ஸ்ரீரங்கம் விளங்குகிறது. அத்தனை ஆழ்வார்களும் ஒருசேர திருவரங்கத்தைப் பாடியிருப்பதால் ‘‘பதின்மர் பாடிய பெருமாள்’’ என்று இவரை அழைக்கிறார்கள். எல்லா ஆசாரியர்களும் இங்கே இருந்து தான் வைணவத்தை வளர்த்தார்கள்.
எங்கு சென்றாலும் இரவு இங்கு வந்துவிடுவார்
108 திவ்யதேசங்களின் கலைகளும் இரவில் திருவரங்கத்துக் கருவறையில் ஒடுங்குவதாகச் சொல்வார்கள். பகவான் தனது நிரந்தர வாசஸ்தலமாக திருவரங்கத்தை அமைத்துக் கொண்டு இருக்கிறான். இதை இங்குள்ள உற்சவங்களே நமக்கு வெளிப்படுத்தும். பல்வேறு உற்சவங்களில் ரங்கநாதப் பெருமாள் புறப்பாடு கண்டருளி, வெளியிலுள்ள மண்டபங்களுக்குச் சென்றாலும், இரவு நேரங்களில் அவ்விடங்களில் தங்காமல் கோயிலுக்கு தமது ஆஸ்தானத்திற்குத் திரும்பி வந்து, அரவணை அமுது செய்து, தனது சிம்மா சனத்தில் சயனித்துக் கொள்வது வழக்கம்.
தெற்கு நோக்கி ஏன் இருக்கிறார்?
பூலோகத்தின் வடக்கே வைகுண்டம் இருக்கிறது. அவ்விடம் செல்ல வேண்டியவர்கள் வடக்கு நோக்கி போக வேண்டும். பூலோக வைகுந்தமான திருவரங்கத்தில் நாம் ரங்க விமானத்தை அடைய தெற்கிலிருந்து வடக்கு நோக்கி போகும்படி வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித உடலின் தலைப்பக்கம் வடக்கு என்றும் பாதம் தெற்கு என்றும் சொல்கிறபடியால் மனிதனுக்கு ஒப்பான ஸ்ரீரங்கம் கோயிலும் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. தொண்டரடிப் பொடியாழ்வார் பெருமாள் தெற்குத் திசை நோக்கி சயனித்த கோலத்தை
“குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு,
உடல்எனக்கு உருகுமாலோ என்செய்கேன் உலகத்தீரே!’’
– என்று பாடியிருக்கிறார்.
இந்த ஏழு பிரகாரங்களுக்கும் தெற்கு நோக்கியே வாசல் அமைக்கப் பட்டிருக்கின்றன. இவைகள் அர்ச்சிராதி மார்க்கமாகிய ஸுஷும்னா நாடியின் தத்துவத்தை உணர்த்துகிறது. மனித தேகத்தின் மூலாதாரத்திற்குக் கீழே உள்ள பாகத்தை உள் திருவீதியும் சித்திரை திருவீதியும் காட்டுகின்றன. மற்ற ஐந்து பிரகாரங்களும் சரீரத்தின் மேல் பாகத்தையும் அதிலுள்ள ஆறு ஆதாரங்களின் தத்துவங்களையும் காட்டுகின்றன என்பர்.
மார்கழி உற்சவம்தான் முக்கியம்
திருவரங்க நாதனுக்கு 365 நாட்களும் ஏதேனும் ஒரு உற்சவம் நடந்து கொண்டுதான் இருக்கும். இந்த உற்சவங்களை தினசரி உற்சவங்கள், பருவ உற்சவங்கள், மஹோற்சவங்கள், வருடாந்திர உற்சவங்கள் (ஸம்வத் ஸரோற்சவங்கள்) என்று பல வகைகளாகப் பிரித்து நடத்துவார்கள். எந்தக் கோயிலாக இருந்தாலும் பெரிய உற்சவம் என்று சொல்லப்படும் பிரம் மோற்சவம் தான் மிகச் சிறப்பான உற்சவமாகக் கருதப்படும். ஆனால் திருவரங்க நாதன் சந்நதியில் மார்கழி மாதத்தில் தமிழ் மொழிக்கு பிரதானமாக, ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும், திருமொழி – திருவாய்மொழி திருநாள் உற்சவம் தான் மிக முக்கியமாகக் கருதப்படும். இந்த உற்சவங்கள், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசித் திருநாள் என்று அழைக்கப்படுகின்றது.
திருமங்கை ஆழ்வார்தான் காரணம்
திருவரங்கநாதர் கோயில் மிகப் பழமையானது. ஆதியில் சத்தியலோகத்தில் பிரம்மா பூஜித்தது. பிறகு இஷ்வாகு மன்னர்களின் குல தனமாக அயோத்திக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஸ்ரீ ராமரால் பூஜிக்கப்பட்டார். அதனால் வைணவ மரபில் ஸ்ரீ ராமரை “பெருமாள்” என்றும் திருவரங்க நாதனை “பெரிய பெருமாள்” என்றும் அழைக்கும் மரபு வந்தது. ஸ்ரீ ராமரிடம் இருந்து பட்டாபிஷேகத்தின் போது, விபீஷண ஆழ்வார் பரிசாகப் பெற்று, இலங்கைக்கு எடுத்துப் போக பிரயத்தனப்பட்டார். ஆனால் திருவரங்கநாதன் காவிரிக் கரையிலே தற்போதுள்ள இடத்தில் தங்கிவிட்டதாக தல வரலாறு. அதற்குப்பிறகு ஆழ்வார்கள் அவதரித்து பாசுரங்களால் இறைவனைப் போற்றிப் பாடினார். 12 ஆழ்வார்களில் கடைசி ஆழ்வார் திருமங்கை ஆழ்வார்தான் தற்போது உள்ள உற்சவத்திற்குக் காரணம் ஆனார்.
திருநெடுந்தாண்டகமே காரணம்
திருமங்கை ஆழ்வாருக்கு தமக்கு முன் தோன்றிய ஆழ்வார்களின் பாசுரங்களில் ஈடுபாடு அதிகம். குறிப்பாக நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங் களின் தத்துவப் பொருள்களை எப்பொழுதும் தியானித்துக் கொண்டு இருப்பார். அந்த நான்கு பிரபந்தங்கள் விளக்கமாக ஆறு அங்கங்களை ஆறு பிரபந்தங் களாக அருளிச் செய்தார். அந்த பிரபந்தங்கள் பெரிய திருமொழி, திருவெழுக் கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம். இந்த ஆறு பிரபந்தங்களுக்கு இணையான பிரபந்தங்கள் இல்லை என்று சொல்லலாம். இவைகள் ஆசுகவி, சித்திரகவி, மதுரகவி, வித்தாரகவி என்று நால்வகை கவிகள் பாடப்பட்டதால், திருமங்கை ஆழ் வாரை நாலு கவிப் பெருமாள் என்று போற்றுவார்கள். அதில் அவர் கடைசியாக எழுதிய பிரபந்தம் திருநெடுந்தாண்டகம். இப்பொழுது உள்ள வைகுண்ட ஏகாதசி உற்சவம் தோன்றுவதற்கு இந்தப் பிரபந்தமே காரணமாக அமைந்தது.
பெருமாளே உகந்து ஏற்ற உற்சவம்
திருவரங்கத்தில் திருக்கார்த்திகை மஹோற்சவம் நடந்துகொண்டிருந்தது. திருமங்கையாழ்வார் அன்றையதினம் அதிக உற்சாகத்துடன், தாம் இயற்றிய திருநெடுந்தாண்டகத்தை ஸ்ரீ ரங்கநாதனுக்கு எதிரில், தேவ கானத்தில் அதி அற்புதமாக அபிநயித்துப் பாடினார். அர்ச்சா திருமேனியில் (விக்கிரக வடிவில்) அதைச் செவி குளிரக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ ரங்கநாத பெருமாள் மிகவும் மகிழ்ந்து, அர்ச்சகர் மூலம் ஆவேசித்து, ஆழ்வாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, திருமங்கை ஆழ்வார் ‘‘நம்மாழ்வார் திருவாய்மொழியை வேத சாம்யம் கொடுத்து கேட்டு அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார். திருமங்கையாழ்வாரின் பிரார்த்தனையை ஸ்ரீரங்கநாதன் ஏற்றுக்கொண்டு, வடமொழி வேதத்திற்கு இணையாக, தமிழ் வேதத்தையும் கேட்டருள இசைந்தார். திருவரங்கப் பெருமாளே இசைந்து ஏற்றுக் கொண்ட உற்சவம்தான் இந்த வைகுண்ட ஏகாதசி உற்சவம்.
பகல்பத்து, ராப்பத்து பாடவேண்டிய பிரபந்தங்கள்
நாதமுனிகள் திருமங்கை ஆழ்வார் ஏற்படுத்திய உற்சவத்தை விரிவு செய்தார். ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம விதிப்படி, வளர்பிறை பிரதமை முதல் பகல் பத்து நாட்கள் நடக்க வேண்டிய உற்சவத்தில் எல்லா ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் சேர்த்து ஓத வைத்தார். பிரபந்தங்களை தாளத்தோடு இசையும் அபிநயமும் சேர்த்து விண்ணப்பிக்க மதுரகவிகள் ஸ்தானத்தில் இசையில் தேர்ச்சி பெற்றவர்களை அரையர்களை நியமித்தார். பகல் பத்து எனப்பெயர் கொண்ட முதல் 10 நாளில் கண்ணிநுண்சிறுத்தாம்பு, திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், வரை ஓதப்பட்டது. அடுத்த பத்து நாட்களில் திருவாய்மொழி பாடி இருபத்தி ஒன்றாம் நாள் இயற்பாபிரபந்தம் பாடி 4000 பாசுரங்களும் இறைவன் கேட்கும்படியாக நியமித்தார் நாதமுனிகள். அவர் காலத்தில் ஆரம்பித்த இந்த உற்சவம் நடைமுறைகளை சில மாறு
பாடுகளோடு ஸ்ரீ ராமானுஜரும் அதற்கு பிறகு மற்ற ஆசாரியர்களும் பின்பற்றினர்.
அரையர் சேவை
திருவரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் என்பது மார்கழி மாதம் அமாவாசை இரவு நடக்கும் உற்சவம். அதற்கு அடுத்த நாள் பகல்பத்து தொடங்கும். திருக்கார்த்திகைக்கு பிறகு இந்த உற்சவம் தொடங்கும் நாள் வரை பெருமாளுக்கு மற்ற உற்சவங்கள் நிறுத்தப்படும். நித்ய உற்சவம் மட்டும் நடக்கும். அமாவாசையன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் யாதும் நடக்காது. அமாவாசை அன்று சாயங்காலம் பெருமாளுக்கு மாலை சாத்தி பால் அன்னம் படையல் நடக்கும். பிறகு கர்ப்பக்கிரகம் சாத்தப்படும். சந்நதி வாசலில் திரை போடப்படும். அரையர்கள் அவர்களுக்கான பட்டுக் குல்லாய் தரித்துக்கொண்டு, தாளத்தோடு திருநெடுந்தாண்டகம் வியாக்கியானத்தோடு பெருமாளுக்கு முன் பாடுவார்கள். அடுத்த நாள் பகல் பத்து திருப்பல்லாண்டு தொடக்கம் ஆகும்.
மோகினி அவதாரம்
பகல்பத்து பத்தாம் திருநாள் மோகினி அவதாரம். மோகினி அவதாரம் என்று பொதுமக்கள் சொன்னாலும், வைணவர்கள் இதனை நாச்சியார் திருக்கோலம் என்பார்கள். பெருமான் அதி அற்புதமாக நாச்சியாராக அலங்கரித்துக்கொண்டு கருட மண்டபம் வந்து காட்சி தருவார். திருப் பாற்கடலை கடைந்தது மார்கழி வளர்பிறை தசமியன்று நடந்ததாகச் சொல்வார்கள். அப்பொழுது மோகினி அவதாரமெடுத்து தேவர்களுக்கு அமுதத்தை பங்கிட்டு தந்தார். அதனை கடைப்பிடிப்பதாக ஒரு வரலாறு. திருமங்கை ஆழ்வார் பெருமாளிடம் நாயகி பாவத்தில் “கள்வன் கொல்” என்று பாடினார். தன்னை பெண்ணாக திருமங்கையாழ்வார் அந்த பாசுரத்தில் பாவித்துக் கொண்டு பாடியதை பெருமாளே அனுசரிப்பதாகச் சொல்வார்கள். எது எப்படியாயினும் வெண்பட்டு உடுத்தி உய்யாரமாக காட்சி தரும் இந்த மோகினி அலங்காரத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
பரமபத வாசல்
தனுர் மாத வளர்பிறை ஏகாதசி அன்று காலை பரமபதவாசல் திறக்கும். இதற்கு திருவாசல் என்று பெயர் ஒரு காலத்தில் மது கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடம் இருந்து வேதத்தை அபகரித்துக் கொண்டு சென்றார்கள். திருமால் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்தார். அசுரர்களோடு சண்டை போட்டு வேதங்களை மீட்டு பிரம் மாவிடம் ஒப்படைத்தார். மகாவிஷ்ணுவின் திருக்கரத்தால் மரணம் தழுவும் போது, தங்களுக்கு முக்தி அளிக்குமாறு பிரார்த்தித்தனர். அவர்களிடம் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று பரமபதம் அளிக்கிறேன் என்று வாக்களித்தார். அதைப்போலவே மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று பரமபதத்தின் வடக்குவாசல் திறந்து அவர்களை பரமபதத்திற்கு அழைத்துச் சென்றார் என்பது புராணக்கதை. வைகுந்த மாநகரின் வடக்கு வாசலுக்கு பரமபத வாசல் என்று பெயர். அந்த திருவாசல் வழியே அசுரர்களை அழைத்துச் சென்ற ஏகாதசி “வைகுண்ட ஏகாதசி”.
எல்லா கோயில்களிலும் சொர்க்கவாசல்
பெரும்பாலான கோயில்களில் வடக்குப் பகுதியில் பரமபதவாசல் இருக்கும். மற்ற நாட்களில் அந்த வடக்கு வாசல் சாத்தப்பட்டு இருக்கும். மார்கழி வளர்பிறை ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி நாளன்று அந்த வாசல் திறக்கும். இதனை சொர்க்கவாசல் திறப்பு என்று அழைப்பார்கள். அன்று யாரெல்லாம் காலையில் நீராடி எம்பெருமானை அந்த வாசல் வழியாக சென்று பக்தியோடு விரதமிருந்து செவிக்கிறார்களோ அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்க்கைக்குப் பின் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.
திருக்கைத்தல சேவை வேடுபறி உற்சவம்
வைகுண்ட ஏகாதசி முடிந்து பரமபத வாசல் திறந்த பிறகு, ராப்பத்து உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அப்பொழுது ஒவ்வொரு நாளும் இரவில் திருவாய்மொழி சேவிக்கப்படும். இந்த ராப்பத்து ஏழாம் நாள் உற்சவம் திருக் கைத்தல சேவை. நம்மாழ்வாருக்கு நாச்சியார் கோலம் இருக்கும். பெருமாள் ஆழ்வாருக்கு அர்ச்சகர்களின் திருக்கைகளில் எழுந்தருளி சேவை சாதிப்பார். இது திருக்கைத்தல சேவை எனப்படும். எட்டாம் நாள் திருவேடுபறி உற்சவம் நடக்கும். பெருமாள் குதிரை வாகனத்தில் வருவார். திருமங்கையாழ்வார் பெருமாளை சுற்றிவந்து பெருமாள் சொத்துக்களையெல்லாம் கொள்ளை இடுகின்ற பாவனையில் நடக்கக்கூடிய உற்சவம் திருவேடுபறி உற்சவம். திருமங்கை ஆழ்வாருக்கு பெருமாள் ஞானம் தந்து ஆழ்வார் ஆக்கிய உற்சவம்.
நம்மாழ்வார் மோட்சம்
வைகுண்ட ஏகாதசி ராப்பத்து திருநாள் பத்தாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இதற்கு அடுத்த நாள் நம்மாழ்வார் மோட்சம். வைகுண்டத்திற்குச் செல்ல விரும்பிய நம்மாழ்வாரை அர்ச்சிராதி மார்க்கத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்வு இது. வைகுண்டம் செல்லும் ஜீவாத்மா பெறும் சிறப்பினை சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லிய முறையில் இந்த உற்சவம் நடக்கும். நம்மாழ்வாரை அர்ச்சகர் சுவாமிகள் கையில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு பெருமாளிடம் போவார்கள். நம்மாழ்வாரை பெருமாள் திருவடியில் கொண்டுபோய் வைப்பார்கள். திருத் துழாயால் ஆழ்வார் திருமேனியை மூடிவிடுவர் அப்பொழுது திருவாய்மொழி சாற்றுப் பாசுரங்கள் சேவிக்கப்படும். பிறகு திருவாராதனம் நடக்கும். நம்மாழ்வாருக்கு மாலை பரிவட்டம் முதலிய உபசாரங்கள் நடக்கும். பின்பு நம்மாழ்வாரை மறுபடியும் கையில் எழுந்தருளச் செய்து அவருடைய சந்நதிக்கு செல்வார்கள். இதற்குப் பிறகு இயல்பாகச் சாற்றுமுறை இருக்கிறது. இதோடு வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவுபெறும்.
The post பூலோக நாயகன் ஸ்ரீரங்கன் appeared first on Dinakaran.