குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் மழையால் தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக, தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறி தோட்டங்களில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ஈரப்பதம் படிப்படியாக குறைந்ததால், போதிய எடை இல்லாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
வெயிலின் தாக்கத்தால் தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை மகசூலும் பாதிக்கப்பட்டதுடன், அதன் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு, தேயிலையின் விலையும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளின் அருகில் இருக்கும் தேயிலை தோட்டங்களுக்கு ‘ஸ்பிரிங்லர்’ மூலம் தண்ணீர் பாய்ச்சி தேயிலை செடிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதனிடையே தற்போது கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேயிலை விவசாயிகள் மட்டுமின்றி மலைத்தோட்ட காய்கறி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post தொடர் மழை எதிரொலி குன்னூர் வட்டார பகுதியில் தேயிலை தோட்டங்களில் மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.