பூண்டு விலை அதிரடியாக குறைந்தது - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

3 hours ago 1

சென்னை,

மருத்துவ குணம் நிறைந்த பூண்டு இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகம் விளைகிறது. இங்கிருந்துதான் நாடு முழுவதும் பூண்டு சப்ளை ஆகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் பூண்டு விளைந்தாலும் அது போதுமானதாக இல்லை.

அசைவ உணவு சமையலில் பூண்டு முக்கிய இடத்தை பிடித்திருப்பதால், தமிழ்நாட்டின் தேவைக்காக தினமும் மத்திய பிரதேசத்தில் இருந்து மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டுவரப்படுகின்றன. இங்கு வரும் பூண்டு தலைநகர் சென்னைக்கு தினமும், தேனி மாவட்டம் வடுகபட்டியில் உள்ள சந்தைக்கு வாரந்தோறும் சப்ளை ஆகிறது.

அந்த வகையில், வடதமிழக தேவைக்காக சென்னைக்கு தினமும் 10 லாரிகளில் பூண்டு கொண்டுவரப்படுகிறது. ஒவ்வொரு லாரிகளிலும் 16 டன் (ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ) எடையிலான பூண்டு எடுத்து வரப்படுகிறது. அதேபோல், வடுகபட்டி வாரச்சந்தைக்கு 50 லாரிகளில் பூண்டு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு வரும் பூண்டு தமிழக தென்மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் சப்ளை ஆகிறது.

இந்த நிலையில், விளைச்சல் குறைவு, உக்ரைன் போர் பதற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக பூண்டு விலை உச்சத்தில் இருந்தது. ஒரு கிலோ ரூ.500 வரை சென்றது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். சமையலில் பூண்டு பயன்பாட்டையும் குறைத்துக் கொண்டனர்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உச்சத்தில் இருந்த பூண்டு விலை தற்போது குறைந்திருக்கிறது. தற்போது, மத்திய பிரதேசத்தில் பூண்டு விளைச்சல் அமோகமாக நடந்து, பொங்கல் பண்டிகைக்கு பிறகு விற்பனைக்கு வரத் தொடங்கி இருக்கின்றன. இதனால், விலையும் குறைந்து வருகிறது.

தற்போது ஒரு கிலோ பூண்டு சிறியது ரூ.110-க்கும், பெரியது ரூ.160-க்கும் விற்பனை ஆகியது. தலைநகர் சென்னையில் தள்ளு வண்டிகளில் வீதி வீதியாக பூண்டு கூவிக்கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூண்டு விலை குறைந்து போனதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Entire Article