பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் தேரோட்டம்

1 week ago 4

கோவையை அடுத்த பூண்டியில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில், ஸ்ரீ மனோன்மணி அம்மன் உடனமர் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். குறிப்பாக, கடந்த 2013-ம் ஆண்டு முதல் பங்குனி உத்திரத்தன்று கோவில் அடிவாரத்தில் தேரோட்ட விழா நடந்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு, பங்குனி உத்திர தேரோட்ட விழா கடந்த 6-ந் தேதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மாலை வேள்வி பூஜை, 3 நாட்களுக்கு காலை, மாலை வேள்வி பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று காலை 8 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தரிசன காட்சி நடந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் கோவிலைச் சுற்றி வெளிப்பிரகாரத்தில் உலா வந்து நிலையை அடைந்தது. அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில், ஆதீனங்கள், கோவில் குருக்கள் மற்றும் சிவபக்தர்கள் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Read Entire Article