ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியத்தில் போந்தவாக்கம் முதல் மேலக்கரமனூர், புதுச்சேரி, அவிச்சேரி, அனுமந்தாபுரம், அழகிரிபேட்டை ஆகிய 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள போந்தவாக்கம் பகுதிக்குச் சென்று அங்கிருந்து ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு உருவான புயல், கனமழையால் போந்தவாக்கம் முதல் மேலக்கரமனூர், புதுச்சேரி வரை உள்ள கிராம சாலை குண்டும் குழியுமாக மாறி, ஜல்லி கற்கள் வெளியே தெரியும் அளவுக்கு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், இச்சாலை வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் பள்ளம் இருப்பதை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் சிலர் விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் சூழலும் நிலவி வருகிறது. இப்பகுதிக்கென்று, ஊத்துக்கோட்டையிலிருந்து மேலக்கரமனூர் வரை ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே இயங்கி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு குண்டும்குழியுமான சாலையை சீரமைக்கவும், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பூண்டி ஒன்றியத்தில் குண்டும் குழியுமான சாலை விபத்துகள் அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.