தென்னை விவசாயிகளுக்கு சில பூச்சிகள் பெரும் தலை வலியை ஏற்படுத்திவிடுகின்றன. அவ்வாறு தென்னையைத் தாக்கி சேதம் ஏற்படுத்தும் பூச்சிகள் குறித்தும், அவற்றை அழிக்கும் முறைகள் குறித்தும் கோயம்புத்தூரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் வல்லுநர்களான முனைவர் ப.குமாரவடிவேலு, மா.சகாதேவன் ஆகியோர் விளக்குகிறார்கள்.
காண்டாமிருக வண்டு
தென்னையைத் தாக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்று காண்டாமிருக வண்டு. இவ்வண்டு கருப்பு நிறத்துடன் தலைப் பகுதியில் ஒரு பின்நோக்கி வளைந்த கொம்புடன் காண்டா மிருகத்தைப் போன்று காணப்படும். தாக்குதல் அதிகம் உள்ள மரங்களில் 40-50 சதவீதம் இளந்தென்னை மட்டைகள் பாதிக்கப்படுவதால் 10-15 சதவீதம் தேங்காய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ச்சியடைந்த மரங்களில் வண்டுகளால் நேரடிப் பாதிப்பு சுமார் 5-7 சதவீதம் வரை ஏற்படுகிறது. வண்டுகள் இலைகளை கடித்து அதன் பரப்பளவை குறைப்பதால் ஒட்டுமொத்த ஒளிச்சேர்க்கைத்திறன் மறைமுகமாக குறைக்கப்படுகிறது. நம் நாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் லட்ச தீவுகள் ஆகிய இடங்களில் சேதத்தைத் ஏற்படுத்திவருகிறது.
சேதாரத்தாக்குதலின்அறிகுறிகள்
* விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடிமட்டைகள் மற்றும் விரியாத பாளைகள் ஆகியவற்றை கடித்து சேதத்தை விளைவிக்கும்.
* தாக்கப்பட்ட இலை இணுக்குகள் விரிந்தவுடன் முக்கோண வடிவில் வெட்டியது போன்று காணப்படும்.
* மரத்தின் உச்சியில் இலை மட்டைகளின் அடிப்பகுதியிலுள்ள துவாரத்திலிருந்து மரச்சக்கைகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும்.
* பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்துகள் வளைந்தும், சுருண்டும் காணப்படும்.
ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்
* தாக்கப்பட்ட மடிந்த தென்னை மரங்களை வெட்டி அகற்றுதல்.
* தோப்புகளில் குப்பை, சாணம் ஆகியவற்றைக் குவிக்காமல் துப்புரவாக வைத்தல். எருக்குழிகளை வெட்டி அதில் போட்டு மண்ணால் மூடுதல்.
* எருக்குழிகளில் காணப்படும் முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டுகளை பொருக்கி அழித்தல்.
* கார்பரில் 2 கிராம் நனையும் தூளை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எருக்குழிகளில் தெளித்து புழுக்களை அழித்தல்.
* வண்டு துளைத்த துவாரங்களின் வழியே நீண்ட கம்பியை உட்செலுத்தி துவாரங்களின் வழியே உட்சென்றுவிட்ட வண்டினை கம்பியால் குத்திக் கொன்று வெளியே எடுத்தல்.
* இரண்டாம் மற்றும் மூன்றாம் இலை இடுக்குகளில் வேப்பங்கொட்டைத்தூள் + மணல் 150 கிராம் இளம் மரம் ஒன்றுக்கு என்ற விகிதாசாரத்தில் கலந்த கலவையை இடுதல்.
* மின்விளக்குப் பொறிகளை வைத்து அதன் வெளிச்சத்திற்கு கீழே விழுகின்ற ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழித்தல்.
* ஆமணக்கு பிண்ணாக்கு 2 கிலோ + ஈஸ்ட் 5 கிராம் + அசிடிக் அமிலம் 5 மிலி நீளவாக்கில் வெட்டப்பட்ட இளம் இலை மட்டைத் துண்டுகள் போடப்பட்ட பானைகளை ஏக்கருக்கு 30 வீதம் தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்து அழித்தல்.
* எருக்குழியில் வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க பச்சை மஸ்கார்டின் என்ற பூஞ்சாணத்தை தெளித்து அழித்தல்.
* பேக்குளோ வைரஸ்நோய்க் கிருமி தாக்கப்பட்ட வண்டுகளை ஒரு எக்டேருக்கு 15 என்ற அளவில் மாலை வேளையில் விடுதல். இவ்வண்டுகள் இனப்பெருக்கம் செய்யும் இடம் மற்றும் உணவு இருக்கும் இடங்களில் வைரஸ் நோயைப் பரப்பி தாக்கி அழிக்கும்.
* துவாரங்களுடன் கூடிய சிறிய பாலிதீன் பைகளில் 2.5 கிராம் போரேட் குருணை மருந்துகளை போட்டு, மரத்திற்கு இரண்டு பாக்கெட்டுகள் வீதம் நுனிக்குருத்தைச் சுற்றி உள்ள இரண்டு இலை அடுக்குகளின் அடியில் வைத்து தடுத்தல்.
* வண்டுகளின் தாக்குதலைத் தடுக்க மூன்று அந்துருண்டைகளை நடுக்குருத்தைச் சுற்றியுள்ள மூன்று இலைமட்டை இடுக்குகளில் ஒன்று வீதம் வைக்கவும்.
* ரைனோலூர் என்ற கவர்ச்சிப் பொறிகளை எக்டேர் 2க்கு ஒன்று வீதம் வைத்து ஆண், பெண் வண்டுகளை கவர்ந்து அழித்தல்.
* பெலேட்டிமெரிஸ் லெவிகாலிஸ் என்ற ஊன் விழுங்கி நாவாய்ப்பூச்சியை மரம் ஒன்றுக்கு 6 வீதம் விட்டு காண்டாமிருக வண்டினை அழித்தல்.
சிவப்புக் கூன்வண்டு
தென்னையில் குறுகிய காலத்தில் அதிக சேதத்தை விளைவிப்பவை இந்த சிவப்புக் கூன்வண்டுகள். வளர்ச்சியடைந்த வண்டுகளால் நேரடி பாதிப்பு இல்லை. ஆனால் இதன் புழுக்களால் ஏற்படும் சேதம் மிக அதிகம். பொதுவாக 5-15 வயதிற்குள் இருக்கும் தென்னை மரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. குருத்தழுகல், இலை அழுகல் மற்றும் காண்டாமிருக வண்டு தாக்கிய இளம் தென்னை மரங்களைச் சிவப்புக் கூன்வண்டு அதிகம் தாக்குகிறது.
சிவப்புக் கூன்வண்டின் தாக்குதலை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவும் அறிகுறிகள்.
* மஞ்சள் நிறத்துடன் உள் மற்றும் நடு இலையடுக்குகளில் உள்ள இலைகள் வாடியது போன்று காணப்படும்.
* மட்டைகளின் அடிப்பாகத்தில் நீள வெடிப்புகள் காணப்படும்.
* இளம் மரங்களின் நுனிப்பகுதி அழுகி ஒருவித துர்வாடை வீசும்.
* தண்டு மற்றும் மரத்தின் அடிப்பாகத்தில் துவாரங்கள் காணப்படும்.
v துவாரங்களின் வழியாக வண்டுகள் தின்று துப்பும் தென்னை நார்கள் வெளிப்படும்.
* துவாரங்களிலிருந்து பழுப்பு நிறத் திரவம் வெளிவரும்.
* கூர்ந்து கேட்டால் சிவப்புக் கூன்வண்டின் இளம் புழுக்கள் தென்னை மரத்தின் தண்டுப்பகுதியை தின்னும்பொழுது ஏற்படுத்தும் சப்தத்தினை கேட்க முடியும்.
* மரத்தின் அடியிலும், மட்டையின் அடியிலும் கூட்டுப்புழுவின் கூடு அல்லது முழு வளர்ச்சி அடைந்த வண்டு அல்லது தின்னப்பட்ட நார்கள் ஆகியவை காணப்படும்.
இவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அடுத்த இதழில் காணலாம்.
The post பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்! appeared first on Dinakaran.