
ஐதராபாத்,
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான 'புஷ்பா 2 தி ரூல்' படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி வெளியானது.
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 1871 கோடி வசூலித்தது. இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் புஷ்பா படத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பேசியுள்ளார்.
மாணவர்களின் நடத்தை குறித்து தெலுங்கானா அரசு பள்ளி ஆசிரியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாநிலக் கல்வி ஆணையத்துடன் கடந்துரையாடல் நடத்தியுள்ளனர். அதில் பங்கேற்ற ஐதராபாத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவர்களின் நடத்தை குறித்து பேசியிருப்பது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், 'அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தை பார்த்து பள்ளி குழந்தைகள் கெட்டுப்போயுள்ளனர். மோசமான ஹேர் ஸ்டைலோடு, ஆபாசமாக மாணவர்கள் பேசுகின்றனர். அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் இதுதான் நிலை. பெற்றோர்கள் கூட இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது நானே தோற்பது போல உள்ளது. இத்தகைய படத்திற்கு எந்த பொறுப்பும் இன்றி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.