புழல் சிறையில் பரபரப்பு சிறை அதிகாரியை தாக்கிய கைதி

4 weeks ago 6

புழல்: சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3000 மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கு மற்றும் சிறை காவலர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அல்உமா பயங்கரவாதி போலீஸ் பக்ருதின்(43). இவர், கடந்த 2018ம் ஆண்டு முதல் புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் விசாரணை கைதியாக உள்ளார். கடந்த, 11ம்தேதி சிறை வளாகத்தில் இருந்த சிறை விஜிலென்ஸ் பிரிவு துணை சிறை அலுவலர் சையத் ஜாவித் என்பவரை பார்த்து உன்னால்தான் நான் இவ்வளவு நாள் சிறையில் உள்ளேன், நீயெல்லாம் ஒரு முஸ்லிமா, உன்னால்தான் எனக்கு சிறையில் சிறப்பு சாப்பாடு வழங்கவில்லை என ஆபாசமாக ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், புழல் காவல் நிலையத்தில் போலீஸ் பக்ருதீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக சென்றுவிட்டு சிறை திரும்பியபோது போலீஸ் பக்ருதீன் அங்கிருந்த விஜிலென்ஸ் பிரிவு துணை ஜெயிலர் சையத் ஜாவித்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்கள், துணை ஜெயிலரை தடுத்து அப்புறப்படுத்தி போலீஸ் பக்ருதீனை அங்கிருந்து அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

இதில், காயமடைந்த துணை ஜெயிலர் சையத் ஜாவித், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் மத்திய சிறையில் சிறை அதிகாரி மீது பயங்கரவாதி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறையில் சிறை அதிகாரிகள், காவலர்கள், கைதிகளால் தாக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறை காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புழல் சிறையில் பரபரப்பு சிறை அதிகாரியை தாக்கிய கைதி appeared first on Dinakaran.

Read Entire Article