புதுச்சேரி: புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துக்கள் அத்துமீறி நுழைந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள். மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை தகாத வார்த்தைகளால் திட்டி, வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வந்த புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. புதுச்சேரி மாணவர்கள் மட்டுமின்றி வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் படித்து வரும் இந்த பல்கலைக்கழகத்தினுள் கடந்த 11-ம் தேதி சனிக்கிழமை மாலை அங்குள்ள விடுதியில் தங்கி முதலாமாண்டு படிக்கும் வடமாநில மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நுழைந்த வெளி நபர்கள் 4 பேர் அவர்கள் இருவரையும் பார்த்து தவறான வார்த்தைகளால் கமெண்ட் செய்துள்ளனர். அதனை அந்த ஆண் நண்பர் தட்டிக்கேட்டபோது, அவர்கள் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளனர்.