புளியங்குடியில் பரிதாபம் மழைக்கால விஷ செடியை தின்ற 5 மாடுகள் பரிதாப பலி

3 weeks ago 5

புளியங்குடி : புளியங்குடியில் விஷ செடிகளை தின்ற 5 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அந்த மாடுகளை வளர்த்த குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புளியங்குடி கிருஷ்ணப்பர் நாயகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்து (52). இவரது குடும்பத்தினர் பரம்பரையாக கால்நடைகள் பராமரித்து வருகின்றனர்.

இவரது வீட்டில் தற்போது 7 பசுமாடுகள், ஒரு காளை என 8 மாடுகள் உள்ளன. நேற்று முன்தினம் காலை முத்துவின் உறவினர் மாடுகளை புளியங்குடியில் உள்ள சமுத்திரம் குளத்துக்கரையில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.

அப்போது மழைக்காலத்தில் முளைத்திருந்த செடிகளை மாடுகள் தின்றுள்ளது. இதையடுத்து இரண்டு மாடுகள் வயிறு உப்பிய நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துவின் உறவினர், மற்ற மாடுகளை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இதனைத்தொடர்ந்து மேலும் 3 பசுமாடுகள் வயிறு வீங்கிய நிலையில் அடுத்தடுத்து இறந்தது. ஒரே நேரத்தில் 5 மாடுகள் உயிரிழந்ததால் முத்து குடும்பத்தினர், சோகம் தாங்க முடியாமல் கதறி அழுதனர். இதையடுத்து இறந்த 5 மாடுகளும், அங்குள்ள பகுதியில் நேற்றுமுன்தினம் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மழைக்காலத்தில் வளரும் விஷ செடியான செம்மண் நெருஞ்சி விஷ செடிகளை தின்றதால் 5 மாடுகளும் உயிரிழந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே புளியங்குடி பகுதியில் காணப்படும் விஷ செடிகளை அப்புறப்படுத்தி கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கால்நடை மருத்துவர்களும் இது பற்றிய விழிப்புணர்வை மாடுகளை வளர்ப்பவர்களுக்கு வழங்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post புளியங்குடியில் பரிதாபம் மழைக்கால விஷ செடியை தின்ற 5 மாடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article