சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

14 hours ago 2

ஓசூர், பிப்.10: ஓசூரில் பாகலூர் சாலை தூசு நிரம்பி காற்று மாசடைந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஓசூர் மாநகரம் தமிழகத்தின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது. ஓசூர் வழியாகத்தான் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள், தமிழகத்திற்கு நுழைந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல முடியும். ஓசூர் பகுதியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெங்களூர் -சென்னை தேசிய நெடுஞ்சாலையை போன்று மிகவும் முக்கியமான சாலை ஓசூர் -மாலூர் தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரவு- பகல் என எந்நேரமும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

இந்நிலையில், ஓசூர் முதல் சமத்துவபுரம் வரை சுமார் 5 கி.மீ., தொலைவிற்கு சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. பல்லாங்குழியான இந்த சாலையில், வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வழியாக நடந்து செல்வோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கனரக வாகனங்கள் செல்லும்போது எழும்பும் தூசி, காற்றில் கலந்து அப்பகுதியில் சுமார் அரை நேரம் வரை சுழன்று கொண்டிருக்கிறது. புழுதி பறப்பதால் சாலையின் இரு பக்கமும் உள்ள உணவகங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பலதரப்பட்ட கடைகளில் தூசு படிகிறது.

ஓசூர் மாநகரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மக்கள் குடியேறி வருகின்றனர். எனவே, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் இருந்து, மாநகராட்சி அலுவலகம் வரை சாலையை அகலப்படுத்தி, சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article