சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வர முடையார் கோயிலில் கும்பாபிஷேகம்

14 hours ago 2

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் புகழ்பெற்ற பரிகாரத்தலமாக விளங்கும் ஆதி ராகு கோயில் என அழைக்கப்படும் நாகேஸ்வர முடையார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இறைவன் நாகேஸ்வர முடையார் இறைவி புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்புரிகிறரார். ராகு தோஷம் உள்ளவர்கள் நாகேஸ்வரமுடையார் கோவிலில் உளுந்து தானியம் மீதும், கேது தோஷம் உள்ளவர்கள் கொள்ளு தானியம் மீதும் தீபம் ஏற்றி வழிபட, தோஷத்தின் வீரியம் குறையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ராகுவும் கேதுவும் தவமிருந்து, இறைவனை வழிபட்டு கிரகப் பதவியை அடைந்தனர். அந்த இறைவன் பெயர் நாகேஸ்வரமுடையார், இறைவி பெயர் புன்னாக வல்லி. இவர்கள் அருள்பாலிக்கும் ஆலயம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோவில். இக்கோயில் கும்பாபிேஷகம் இன்று (10ம்தேதி) நடக்கிறது.

ஆதி ராகு ஸ்தலம்:சீர்காழியில் அமைந்திருக்கும் இந்த நாகேஸ்வரமுடையார் கோவில்தான் ஆதி காலத்தில் நவகிரகங்களுக்கானகோவில்களில் ராகு ஸ்தலமாக வழிபாடு நடத்தப்பட்டு வந்திருக்கிறது. தருமபுர ஆதீனத்தின் ஆவணங்களில் இந்த செய்தி பதியப்பட்டு இருப்பது நாம் அறிந்தது தான். இடைக்காலத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை குறிப்பாக நவகிரக சுற்றுலா ஆரம்பித்தபோது இந்த கோவில் சிதிலமடைந்து மக்கள் உள்ளே நுழைய முடியாமல் இருந்த காரணத்தைக் காட்டி திருநாகேஸ்வரத்திற்கு சுற்றுலாத் திட்டம் அரசாங்கத்தால் மாற்றி அமைக்கப்பட்டது. அன்றைக்கு இருந்த அரசு கோவில்களை பற்றி உண்மை தன்மை புரிதல் இல்லாமல்சுற்றுலா திட்டத்தை வடிவமைத்த போது திருநாகேஸ்வரத்தை ராகு ஸ்தலமாக அறிவித்துவிட்டது.

பாம்பு சிலை இருந்தால் அது நாகேஸ்வரர் என்று அறிவித்து விடலாம் என்ற கோணத்தில் அன்றைக்கு இருந்த அரசாங்கம் செய்த காரியத்தால் உண்மையான ராகு பகவான் கோவில் எங்கே அமைந்திருக்கிறது என்பதை மக்களிடமிருந்து இடைக்கால அரசாங்கத்தின் வரலாறு மறைத்து விட்டது.இன்றைக்கும் நகரத்தார் ராகு ஸ்தலம் என்றால் அது சீர்காழியில் அமைந்திருக்கும் நாகேஸ்வரமுடையார் கோவிலில்தான் என்று இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். சிரபுறம் என்று ஏன் சீர்காழிக்கு பெயர் வந்தது என்ற காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும் அந்த கதையை படித்துப் பாருங்கள்,அமுதம் உண்ட அசுரன், சிரம் வெட்டப்பட்டு சீர்காழியில் விழுந்தான். எனவே இத்தலம் சிரபுரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

ராகுவுக்கும் கேதுவுக்கும் கிரகப்பதவி கிடைத்தது அல்லவா? அது என்ன கதை? பூர்வ காலத்தில் தேவரும், அசுரரும் கூடி மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து லட்சுமி, தன்வந்திரி, சிந்தாமணி, ஐராவதம், ஆலகால விஷம், காமதேனு முதலியன தோன்றின. தொடர்ந்து நரை, திரை, பிணி, மூட்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாகிய தேவாமிர்தம் தோன்றியது. அசுரர்கள் இந்த தேவாமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது.

அசுரர்களை எப்படியாவது அமிர்தத்தை உண்ணாமல் தடுத்துவிட வேண்டும் என்று எண்ணிய மகாவிஷ்ணு கதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். மகாவிஷ்ணு, தேவர் களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார். அசுரர்களில் விப்ரசித்திக்கும், இரணியனின் தங்கை சிம்கை என்பவளுக்கும்பிறந்த ‘சியிங்கேயன்’ என்பவன் தேவ வடிவம் கொண்டு தேவாமிர்தத்தை வாங்கி உண்டான்.

சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தைப் பரிமாறிக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அதைக் குறிப்பால் உணர்த்தினர். மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் தேவர்கள் வடிவில் இருந்த அசுரனை ஓங்கி அடித்தார். அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு, தலை ‘சிரபுரம்’ என்ற
தற்போதைய சீர்காழியிலும், உடல் ‘செம்பாம்பின் குடி’ என்ற மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தற்போதைய செம்மங்குடியிலும் விழுந்தது. தேவார்மிதம் உண்டதால், அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாயிற்று. இறைவன் அருளால் மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ‘ராகு’வும், பாம்புத் தலையும் மனித உடலும் கொண்டு ‘கேது’வும் தோன்றினார்கள். நவகிரகங்களில் அவர்கள் விளங்கும்படி வரமளித்தார் சிவபெருமான் இது புராணம்.

இந்தக் கதையின் படி சீர்காழிகள் அமைந்திருக்கக் கூடிய அதாவது சிறபுறம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் இருக்கும் தொன்மையான இந்த ஆலயம் தான் ராகு திருத்தலம் என்பது புலப்படுகிறது. ராகு, கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட நந்தவனத்தைப் பாதுகாப்பதற்காக விநாயகர், காகம் வடிவம் கொண்டு, அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து விட்டதால் வந்த தீர்த்தமே கழுமல நதியாகும்.

இதுவே இந்த ஆலயத்தின் தீர்த்தம். இந்த நதி ஆலயத்தின் மேற்குத் திசையில் ஓடுகிறது. இப்படி தனிச்சிறப்பு வாய்ந்த வரலாற்றை அரசாங்கம் நினைத்தால் மறைத்து விட முடியுமா என்பது தான் பக்தர்களின் கேள்வியாக இருக்கிறது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணியை துவக்கி இருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பக்தர்களை பொறுத்த மட்டில் ஆதி ராகு ஸ்தலம் குடமுழுக்கு செய்யப்படுவதில் ஆத்மார்த்தமாக இருதயசுத்தமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள், புகழ்பெற்ற கோயிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேக பணிகளை பொறியாளர் மார்கோனி, மற்றும் டாக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட பக்தர்கள் திருப்பணிகளை சிறப்பாக செய்ய உதவி புரிந்தனர்.

The post சீர்காழியில் ஆதி ராகு ஸ்தலம் என்று அழைக்கப்படும் நாகேஸ்வர முடையார் கோயிலில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article