போச்சம்பள்ளி, பிப்.10: ஓசூர் மற்றும் சுற்றியுள்ள கெலமங்கலம், தளி, தேன்கனிகோட்டை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் பரவலாக காலிபிளவர் சாகுபடி செய்து வருகிறார்கள். இங்கிருந்து சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது காலிபிளவர் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், ஓசூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள்டெம்போ மூலம் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
போச்சம்பள்ளியில் நேற்று கூடிய வாரச்சந்தையில் மலை போல் குவித்து வைத்து கூவி, கூவி விற்பனை செய்தனர். ஒரு காலிபிளவர் ₹50 முதல் ₹75 வரை விற்பனையான நிலை மாறி, நேற்றைய சந்தையில் ₹20 முதல் ₹25 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்ததால் சந்தைக்கு வந்த மக்கள், இல்லத்தரசிகள் காலிபிளவரை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். ஓட்டல் மற்றும் பலகார கடை, தாபா நடத்துபவர்களும் காலிபிளவர் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு ஏக்கரில் காலிபிளவர் பயிரிட ₹75 ஆயிரம் செலவாகிறது. நன்கு பராமரித்து வந்தால் 55 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு வரும். தற்போது, காலிபிளவர் விளைச்சல் அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது. வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால் நாங்களே நேரடியாக சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு டெம்போ மூலம் எடுத்துச்சென்று, வந்த விலைக்கு விற்பனை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.
The post காலிபிளவர் விலை சரிவு appeared first on Dinakaran.