புல்லட் யானையிடம் இருந்து தப்பிக்க வீட்டு வாசலில் மிளகாய் பொடி கரைசல் துணி: தொழிலாளர்கள் நூதன முயற்சி பலனளிக்குமா?

3 weeks ago 6

பந்தலூர்: பந்தலூர் அருகே புல்லட் யானையிடம் இருந்து உயிர், உடமைகளை காக்க தோட்டத்தொழிலாளர்கள் வீட்டின் வாசல் கதவுகளில் மிளகாய் கரைசலில் ஊற வைத்த துணிகளை கட்டி வைத்துள்ளனர். தொழிலாளர்களின் இந்த நூதன முயற்சி பலனளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், சேரம்பாடி, பிதர்காடு வனச்சரகத்தில் சேரங்கோடு டேன்டீ , சிங்கோனா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டாம்பாறை, அய்யன்கொல்லி மூலைக்கடை, சேரம்பாடி டேன்டீ உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 35 க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதம் செய்த புல்லட் என்னும் பெயரிடப்பட்ட யானை, விவசாய பயிர்களையும் அழித்தது.

இதைத்தொடர்ந்து, கண்ணில் பட்ட வாகனங்களை தாக்குவது, பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்துவது என அட்டகாசம் செய்து வருகிறது. புல்லட் யானையை வனத்துறையினர் 75 வனப்பணியாளர்களை கொண்டு, 5 குழுக்களாக பிரித்து டிரோன் கேமராவில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். புல்லட் யானை பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த நடவடிக்கை பலன் அளிக்காது. புல்லட் யானை மீண்டும் குடியிருப்புக்குள் வந்து பொதுமக்களை மீண்டும் மீண்டும் அச்சுறுத்தும்.

எனவே, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு போன்ற யானைகள் முகாமிற்கு புல்லட் யானையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அண்மையில், பந்தலூர் பகுதிக்கு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாலர் நாகநாதன் வந்து, வனத்துறை உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். இந்நிலையில், புல்லட் யானை பகல் முழுதும் வனப்பகுதியில் இருந்து விட்டு இரவு நேரங்களில் குடியிருப்புகளை குறிவைத்து தாக்கி வருவது பொதுமக்களிடம் அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கிளன்ராக் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புல்லட் யானை சேரம்பாடி டேன்டீ தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை குறி வைத்து தாக்கி சேதப்படுத்தி வருகிறது. இதனால், அப்பகுதி தொழிலாளர்கள் தங்கள் வீட்டிற்கு முன்பு கதவுகளில் மிளகாய் கரைசலில் ஊற வைத்த துணிகளை கட்டி வைத்து, தங்கள் குடியிருப்பை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வனத்துறையை நம்பி பயன் இல்லை எனவும், வாசலை குறி வைத்து உடைக்கும் யானை மிளகாய் வாசனையை நுகர்ந்நால் வீட்டின் அருகே வராமல் போகும் என்பதும் தொழிலாளர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால், இந்த முயற்சி பலனளிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

The post புல்லட் யானையிடம் இருந்து தப்பிக்க வீட்டு வாசலில் மிளகாய் பொடி கரைசல் துணி: தொழிலாளர்கள் நூதன முயற்சி பலனளிக்குமா? appeared first on Dinakaran.

Read Entire Article