புலி பாய்ச்சல்

2 days ago 2

இந்தியாவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 37.1 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 11 மாதங்களில் மட்டும் 12.6 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களை தமிழ்நாடு ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அதாவது 2020-21-ம் நிதியாண்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022-23-ம் நிதியாண்டில் நாட்டிலேயே முதலிடத்தை எட்டிப்பிடித்தது.

குறிப்பாக, உத்தரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளி, தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த ஓராண்டிலேயே இந்த சாதனையை எட்ட முடிந்துள்ளது என்பதோடு அந்த காலகட்டத்தில் அதாவது 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டின் ஏற்றுமதி 223 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் நடத்திய தொழில் முதலீட்டு மாநாடுகள், வெளிநாட்டு பயணங்கள் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்தது, தொழில் துறையில் உயர்ந்த தொழிற் கொள்கைகளை கடைபிடிப்பது, தொலைநோக்கு பார்வை உடைய தலைமைத்துவம், உற்பத்தி மற்றும் துல்லிய பொறியியலில் சிறந்து விளங்குதல், உயர்தர தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களால் தொழில் புரட்சியை நோக்கி தமிழ்நாடு அரசு மின்னல் வேகத்தில் பயணித்து வருகிறது. அதன் பயனாக இன்றைக்கு தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு 2021ம் ஆண்டில் 1.8 பில்லியன் டாலராக இருந்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதியானது தொலைநோக்கு திட்டங்களால் மளமளவென வளர்ந்து இன்றைக்கு 2025ம் ஆண்டில் 12.5 பில்லியன் டாலரை தாண்டி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நாட்டின் மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 37.1 சதவீதத்தில் இருக்கும் தமிழ்நாடுக்கு அடுத்தபடியாக 20.2 சதவீதத்துடன் கர்நாடக மாநிலம் உள்ளது.

முதலிடத்திற்கும் இரண்டாவது இடத்திற்கான வேறுபாடு என்பது ஏறக்குறைய 17 சதவீதம் ஆகும். எல்லாவற்றிக்கும் குஜராத் மாடல் என்று மார்தட்டும் பாஜ ஆட்சி செய்யும் குஜராத் வெறும் 4.8 சதவீதம் மட்டுமே. பாஜ ஆளும் மாநிலங்களுக்கு தேவையான நிதியை அள்ளிக்கொடுத்தபோதும், அனைத்து சலுகைகளை வாரி வழங்கியபோதிலும் அந்த மாநிலங்கள் எந்த வளர்ச்சியையும் எட்டவில்லை.
ஆனால் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலேயே தமிழ்நாடு இந்திய அளவில் 37 சதவீத மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து பெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்ன சாதித்துவிட்டது? என்று அவ்வப்போது வெற்று கூச்சல் போடுபவர்களுக்கு சத்தமே இல்லாமல் தனது செயல்திறன் மூலம் இதுதான் திராவிட மாடல் என்பதை உணர்த்தி உள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த சாதனை என்பது திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கான சிறிய எடுத்துக்காட்டுதான்.

இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் மிஷன், 200 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்தி பூங்கா, சென்னைக்கு அருகில் உலகளாவிய நகரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்துறையில் உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகவும், தெற்காசியாவின் முதலீட்டு மையமாகவும் தமிழ்நாட்டை மேம்படுத்துவதே எங்கள் இலக்குடன் திராவிட மாடல் அரசு புலி பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது.

 

The post புலி பாய்ச்சல் appeared first on Dinakaran.

Read Entire Article