பஹல்காம் தாக்குதலால் கட்சி தலைமை அப்செட்; பாஜக தேசிய தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு: பிரதமர் மோடியின் ரஷ்யா பயணமும் ரத்து

3 hours ago 3

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலால் பாஜக கட்சி தலைமை அப்செட் ஆன நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் ரஷ்யா பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கடந்த 2019 ஜூன் முதல் பொறுப்பு தலைவராக பணியாற்றிய பிறகு, 2020 ஜனவரி முதல் கட்சியை வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ், பாஜக 35 மாநிலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு, 16 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மாநில அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்த பிறகு புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க பாஜக திட்டமிட்டிருந்தது. இத்தேர்தலை கடந்த ஜனவரியில் நடத்த பாஜக திட்டமிருந்தது. ஆனால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகளில் தேர்தல் நிலுவையில் இருப்பதால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவின் அமைப்பு விதிகளின்படி தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு குறைந்தது 50% மாநில அமைப்புகள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அமைப்பு தேர்தல்கள் முடிந்து மாநில தலைவர் தேர்வு ெசய்யப்பட்டும், தேசிய தலைவருக்கான தேர்தல் இன்னும் நடத்தப்படாமல் இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசிய தலைவர் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய தலைவர் ஜே.பி. நட்டா தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்த ஒத்திவைப்புக்கு முக்கிய காரணமாக, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை காரணமாக குறிப்பிடப்படுகின்றன. மேலும் பாஜக கட்சியின் அமைப்பு தேர்தல் செயல்முறையை சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக – ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடையே உடன்பாடு எட்டப்பட்ட நிலையிலும் கூட, தற்போதைய சூழல்களால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல் ஒத்திவைப்பு குறித்து பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் காலக்கெடு எதையும் குறிப்பிடவில்லை. தற்போதைய சூழ்நிலைகளில், கட்சியின் ஒருங்கிணைப்பு மற்றும் அடுத்தகட்ட சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கவும், ஜே.பி. நட்டாவின் தலைமையை அப்படியே நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 9ம் தேதி மாஸ்கோவில் நடைபெறவிருந்த வெற்றி தின அணிவகுப்பு விழாவில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புடினின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா செல்லவிருந்தார்.

இந்த விழா, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறவிருந்தது. இரு நாட்டு தலைவர்களிடையே பேச்சுவார்த்தைகள் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலையடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், பிரதமர் மோடி இந்தப் பயணத்தை ரத்து செய்தார். இதனை ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ உறுதிப்படுத்தினார். பிரதமர் மோடிக்கு பதிலாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பஹல்காம் தாக்குதலால் கட்சி தலைமை அப்செட்; பாஜக தேசிய தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு: பிரதமர் மோடியின் ரஷ்யா பயணமும் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article