புற்றுநோயால் உயிரிழக்கும் 70% பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்

3 weeks ago 4

புற்றுநோயால் உயிரிழக்கும் 70 சதவீத பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். மனிதனின் வாழ்வியல் மாற்றம், உணவு பழக்கம், போதை பழக்கம், மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நுரையீரல் புற்றுநோய், வாய் தொடர்பான புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பாக புற்றுநோய் ஆகிய 5 புற்றுநோய் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்த மார்பக புற்றுநோய் தவிர மற்ற புற்றுநோய்கள் அனைத்தும் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் வரும். ஆனால் மார்பக புற்றுநோய் பெண்களை மட்டுமே அதிக அளவில் பாதிக்கும். மார்பகத்தில் உள்ள செல்கள், கட்டுப்பாடு இன்றி பெருகும் நிலையில் புற்றுநோய் கட்டி ஏற்படுகிறது. உலகளவில் 1990ல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாக இருந்தது, அது தற்போது கிட்டத்தட்ட 4 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையிலும் 1 லட்சம் பெண்கள் பரிசோதனை மேற்கொண்டால் அதில் 25 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு அடைகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு வரை 16 பெண்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அது தற்போது 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மார்பகம் புற்றுநோய் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. 1 லட்சம் பெண்கள் பரிசோதனை மேற்கொண்டால் அதில் கிட்டத்தட்ட 37 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு அடைகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக, 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர தொடங்கும். 60 வயதுக்கு மேல் 8ல் 1 பெண்ணுக்கு இந்த மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நிலையில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முழுவதும் “மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு’ மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் புற்றுநோயால் இறக்கும் 70 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பெண்களுக்கு அதிகமாக பாதிப்பை வழங்கும் நோயாக மார்பக புற்றுநோய் உள்ளது.

மேலும் புற்றுநோயால் இறக்கும் 70 சதவீத பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். தாமதமாக சிகிச்சைக்கு வருவதே இதற்கு முக்கிய காரணம். தமிழகத்தில் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த 2015 முதல் மார்பக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக 30 வயதை கடந்த அனைவரையும் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்டத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மாதம் ஒரு முறை சுயபரிசோதனை செய்ய வேண்டும். மார்பகத்தில் ஏதாவது மாற்றம் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். 30 வயதை கடந்த அனைத்து பெண்களும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கிராமப்புறத்தில் உள்ள பெண்களை விட நகரத்தில் உள்ள பெண்களுகே மார்பக புற்று நோய் அதிகம் ஏற்படுகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் கூறியதாவது: மார்பக புற்றுநோய் தற்போது அதிகரித்து வருகிறது குறிப்பாக கிராமப்புரத்தை காட்டிலும் நகரத்தில் உள்ள பெண்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுகிறது.

கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் அளவீடுகளுக்கான தேசிய கவுன்சில் ஆய்வுப்படி தமிழகத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 4சதவீதம் அதிகரித்து வருகிறது என தெரிவித்துள்ளது. இந்த புற்றுநோய் பொதுவாக 4 நிலை உள்ளது. முதல் நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் அறுவை சிகிச்சை செய்து 100 சதவீதம் குணப்படுத்த முடியும், அந்த புற்றுநோய் 2ம் நிலையை அடைந்து இருந்தால் கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை செய்து 40 சதவீதம் முழுமையாக குணப்படுத்திவிடலாம். மார்பக புற்று நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. குறிப்பாக உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் இருத்தல், கொழுப்பு உள்ள உணவுகளை உண்ணுதல், மது அருந்துதல், கர்ப்ப தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, 30 வயதுக்கு மேல் முதல் பிரசவம் போன்றவற்றால் மார்பக புற்று நோய் ஏற்படலாம். குரோமோசோம்களில் BRCA 1&2 என்ற மரபணுக்கள் தோன்றுவதும்கூட மார்பகப் புற்றுநோயை உருவாக்கலாம். இதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை முறையாக எடுக்க வேண்டும். முக்கியமாக, மக்கள் மூடநம்பிக்கையை பின்பற்றக்கூடாது. முறையாக மருத்துவர் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இங்கு டும்மர் போர்டு (tumor board) உள்ளது. எனவே ஒரு புற்றுநோயாளிக்கு என்ன சிகிச்சை அளிக்கவேண்டும், எவ்வாறு அளிக்கவேண்டும் என்றெல்லாம் அங்கு ஆலோசனை செய்த பிறகு சிகிச்சை அளிக்கப்படும். பரிசோதனை செய்து புற்றுநோய் கண்டறிந்த பிறகு 10 நாட்களுக்குள் சிகிச்சை தொடங்கப்படும். வருடத்திற்கு 2000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலத்தில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர். பொதுவாக தனியார் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு 7 முதல் 8 லட்சம் வரை செலவாகும். ஆனால் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இந்த நேரத்தில் மக்கள் குறிப்பாக பெண்கள், இதுதொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post புற்றுநோயால் உயிரிழக்கும் 70% பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article