தாம்பரத்தில் இன்று அதிகாலையில் மனநிலை பாதித்தவர் அடித்து படுகொலை: வக்கீல் உட்பட 2 பேர் கைது

4 hours ago 2

தாம்பரம்: தாம்பரத்தில் இன்று அதிகாலை போலீஸ் கண் முன்பு மனநிலை பாதிக்கப்பட்டவரை அடித்து கொலை செய்த வக்கீல், சட்டக்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (59) மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர், கடந்த 19ம்தேதி வீட்டில் இருந்து வெளியேறி தாம்பரம் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் ரங்கநாதன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்ததும் தாம்பரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்திகொண்டிருந்தனர்.

அப்போது, சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன், சட்டக்கல்லூரி மாணவர் வினோத் ஆகியோர் திண்டிவனம் செல்ல காரில் தாம்பரம் வந்துள்ளனர். அவர்கள், கடையில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம் அருகே காரை நிறுத்தியுள்ளனர். அப்போது, ரங்கநாதன் திடீரென ஓடிவந்து மணிகண்டனின் கார் கண்ணாடியை கையால் தட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், வினோத் ஆகியோர் ரங்கநாதனை சரமாரி தாக்கியுள்ளனர். அப்போது போலீசார் அவர்களை தடுக்க முயற்சித்துள்ளனர். ரங்கநாதன் மனநிலை பாதிக்கப்பட்டவர் அவரை அடிக்க வேண்டாம் என கூறியுள்ளனர். அதையும் மீறி ரங்கநாதனை கடுமையாக தாக்கி கீழே தள்ளியுள்ளனர். இதில் ரங்கநாதனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ளார்.

இதையடுத்து படுகாயமடைந்த ரங்கநாதனை போலீசார் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து மனநிலை பாதிக் கப்பட்டவரை சரமாரி தாக்கி கொலை செய்த வழக்கறிஞர் மணிகண்டன் (33), சட்டக்கல்லூரி மாணவர் வினோத் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பரபரப்பு நிலவியது.

The post தாம்பரத்தில் இன்று அதிகாலையில் மனநிலை பாதித்தவர் அடித்து படுகொலை: வக்கீல் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article