தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

5 hours ago 2

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் நாளை திறக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். குறைந்த விலையில் மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஏராளமானோர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்று கொள்ளப்பட்டது. தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. அதாவது சென்னையில் 33 இடங்களிலும் மதுரையில் 52 ,கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும் மீதமுள்ள 50 சதவீதம் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நாளை காலை நடக்கிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக கடையையும் அவர் பார்வையிடுகிறார். மேலும் பொதுமக்களிடம் மருந்தகம் தொடர்பாக பேச உள்ளார். இந்த நிலையில் விழா நடைபெறும் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கம் மற்றும் பாண்டி பஜாரில் உள்ள முதல்வர் மருந்தகத்தையும் அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article